உலகம் முழுவதும் தங்கம் மிக மதிப்புமிக்க உலோகமாகக் கருதப்படுகிறது. முதலீடு, ஆபரணம் மற்றும் நாட்டின் பொருளாதார வலிமையின் அடையாளமாகவும் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அண்டார்டிகாவில் அமைந்துள்ள மவுண்ட் எரேபஸ் (Mount Erebus) என்ற செயலில் உள்ள எரிமலை குறித்து வெளியாகியுள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த எரிமலை நாள்தோறும் சுமார் 80 கிராம், அதாவது 10 பவுன் அளவுக்கு சமமான நுண்ணிய தங்கத் துகள்களை காற்றில் வெளியேற்றுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தங்கத் துகள்கள் எரிமலையிலிருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவு வரை காற்றில் பரவி, அண்டார்டிகாவின் பனிப்பாறைகளில் படிவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெளியேறும் தங்கத் துகள்களின் மதிப்பு ஆண்டுக்கு பல கோடி ரூபாயாக இருக்கும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த தங்கம் மிக நுண்ணிய துகள்களாக வளிமண்டலத்தில் கலந்துவிடுவதால், அவற்றை சேகரித்து வணிக ரீதியில் பயன்படுத்துவது தற்போதைய நிலையில் சாத்தியமில்லை என்று ஆய்வாளர்கள் விளக்குகின்றனர்.
அண்டார்டிகாவில் தொடர்ந்து செயல்பட்டு வரும் சில எரிமலைகளில் ஒன்றான மவுண்ட் எரேபஸ், அதன் தனித்துவமான லாவா ஏரி மற்றும் தங்கத் துகள்களை வெளியேற்றும் இயற்கை நிகழ்வால் உலக விஞ்ஞானிகளின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறது.
