20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது பாடசாலை மாணவியுடன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பாலியல் தொந்தரவு வழங்கிய வழக்கில், இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பாண்டியராஜன் எ ஜான் ஒபெத் 24 கடந்த 2021ஆம் ஆண்டு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இதுகுறித்து மாணவியின் தாயார் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், திருமங்கலம் அனைத்து மகளிர் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
வழக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், பாண்டியராஜன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.

இதனையடுத்து, குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
