அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதன்மூலம் இனி இஸ்ரேல் காசா மோதலுக்கு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் காசா இடையே இனி போர் வருவதை தடுக்கும் வகையில் காசா அமைதி வாரியம் சார்பில் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி காசாவில் இயங்கி வரும் ஹமாஸ் உள்பட பிற ஆயுத குழுவினர் தங்களின் ஆயுதங்களை ஒப்படைப்பதாகவும், அதன்பிறகு படிப்படியாக காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதன்மூலம் இனி இஸ்ரேல் காசா மோதலுக்கு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு எதிராக இஸ்ரேல் போர் புரிந்து வந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையீட்டை தொடர்ந்து இந்த போர் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து காசா – இஸ்ரேல் இடையே நிலையான அமைதியை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைதி வாரியம் அமைக்கப்பட்டது.
இந்த அமைதி வாரியம் தற்போது முக்கிய பணியை செய்து முடித்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஆயுதங்களை கைவிட்டு முழுமையாக ஒப்படைக்கவும், காசாவில் இருந்து படிப்படியாக இஸ்ரேல் வெளியேறவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில், ” இன்று, காசாவில் உள்ள ஹமாஸ் மற்றும் பிற அனைத்து ஆயுத குழுக்களும் தங்களின் முழுமையாக ஆயுதங்களை கைவிடுவதாக ஒப்பந்தம் செய்துள்ளன. இது காசாவின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கான முக்கிய படியாகும். இந்த ஒப்பந்தத்தின்படி காசாவில் புதிய பாலஸ்தீன அரசு அமைவதும், அந்த அரசு அமைதி வாரியத்துடன் சேர்ந்து செயல்பட்டு பொதுமக்களுக்கு உதவி செய்யும். இதன்மூலம் காசா இனி பயங்கரவாத தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படும் தளமாக இருக்காது. இதனால் இஸ்ரேல் தனக்கான பாதுகாப்பை பெறும்.

இது காசா அமைதி வாரியத்தின் 20 பிளான்களில் முக்கிய முக்கிய மைல்கல்லாகும். ஆயுதக்குழுக்கள் முழுமையாக ஆயுதங்களை ஒப்படைக்கப்பட்ட பிறகு இஸ்ரேல் படைகள் படிப்படியாக காசாவை விட்டு வெளியேறும். அதன்பிறகு சர்வதேச ஸ்டெபிலிசேஷன் ஃபோர்ஸ் பாலஸ்தீனத்தின் புதிய போலீஸ் படையுடன் சேர்ந்து செயல்பட்டு காசாவின் மக்களுக்கும், பக்கத்தில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றி கொடுக்கும். இந்த வேளையில் மத்தியஸ்தம் செய்த எகிப்து, கத்தார், துருக்கியே உள்ளிட்ட நாடுகளுக்கு நன்றி தெரிவித்து வருகிறோம்” என கூறியுள்ளார்.

டிரம்ப் இப்படியான அமைதி ஒப்பந்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு இருந்தால் தற்போது வரை இந்த ஒப்பந்தம் தொடர்பாக காசாவில் இயங்கும் ஹமாஸ் அமைப்பு மற்றும் இஸ்ரேல் சார்பில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
