July 28, 2026
இலங்கைசர்வதேசம்

கனடாவில் போதைப்பொருள் கடத்தல்: இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

ஒட்டாவா:

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் நடைபெற்ற மிகப்பெரிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில், இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். “Project Bay” எனப் பெயரிடப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கை, அமெரிக்கா–கனடா எல்லை வழியாக நடைபெற்று வந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை முறியடிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டது.

அமெரிக்க எல்லையிலிருந்து வணிக லாரிகள் மூலம் கனடாவிற்குள் பெருமளவில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, ஒன்டாரியோ மாகாண போலீசார் (OPP), கனடா எல்லைப் பாதுகாப்பு முகமை (CBSA) மற்றும் பல்வேறு சட்ட அமலாக்க அமைப்புகள் இணைந்து பல மாதங்களாக தீவிர விசாரணை மேற்கொண்டன.

இதன் தொடர்ச்சியாக ஒன்டாரியோ மாகாணத்தின் விண்ட்சர், லசாலே, கொரூனா, பிராம்ப்டன், மார்கம், காலிடன் உள்ளிட்ட பகுதிகளில் 22 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் இந்திய வம்சாவளியினர் உட்பட மொத்தம் 19 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் இருவர் தலைமறைவாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோதனைகளின் போது சுமார் 973 கிலோ கோகெய்ன், 660 கிலோ மெத்தாம்பெட்டமைன், 49 கிலோ ஓப்பியம், 230 ஒக்ஸிகோடோன் மாத்திரைகள், 17 துப்பாக்கிகள், ஆயிரக்கணக்கான கனேடிய மற்றும் அமெரிக்க டாலர்கள், உயர்தர நகைகள், பணம் எண்ணும் இயந்திரங்கள், செல்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் ஒரு வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு 139 மில்லியன் கனேடிய டாலருக்கும் அதிகமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது ஒன்டாரியோ மாகாண வரலாற்றில் எடையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் மூலம் அமெரிக்கா–கனடா எல்லை வழியாக செயல்பட்டு வந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Related posts

அமெரிக்க-ஈரான் மோதலில் பதற்றம் ஈரானை சூழும்10,000 படை வீரர்கள், 12 போர்க்கப்பல்கள் ; உச்சக்கட்ட பதற்றத்தில் உலகம்

finhelvantaan

அமெரிக்காவுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர் பாகிஸ்தான் பேசுவார்த்தைக்கு முன்.. இடத்தை காலி பண்ணுங்க

finhelvantaan

ஹூத்தி தாக்குதல் இஸ்ரேலை குறிவைத்து 

finhelvantaan

Leave a Comment