மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் பச்சை பட்டுடுத்தி, தங்க குதிரையில், வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று அதிகாலை 5.35 மணி முதல் 5.55 மணிக்குள் நடைபெற்றது. அழகர் ஆற்றில் இறங்கியதும் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டனர்.
மதுரை சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 28-ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவமும் ஏப்ரல் 29ஆம் தேதி திருத்தோரோட்டமும் நடந்தது.

இந்த நிலையில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக நேற்று முன் தினம் (ஏப்.29) மாலை 6.15 மணிக்கு அழகர் மலையில் இருந்து கள்ளர் கோலத்தில் தங்கப்பல்லக்கில் மதுரை நோக்கி புறப்பட்டார். நேற்று (ஏப்.30) அதிகாலை 5.30 முதல் 6.30 மணிக்குள் மதுரை மூன்றுமாவடி அருகே கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது.

அன்றைய தினம் இரவு 11 மணி முதல் 11.59 மணிக்குள் தல்லாக்குளம் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம் முடிந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். இதனையடுத்து தங்கக் குதிரை வாகனத்தில் ஏறி வைகை ஆற்றில் எழுந்தருள வருகை தரும் கள்ளழகரை வெள்ளிக்குதிரை வாகனத்தில் வீரராகவப் பெருமாள் வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது அவரது கோபத்தை அமைதிப்படுத்த தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. சித்ரா பௌர்ணமி நாளான இன்று அதிகாலை 5.35 மணி முதல் 5.55 மணிக்குள் பச்சை பட்டுடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்குள் கள்ளழகர் எழுந்தருளி அருள்பாலித்தார். அப்போது கோவிந்தா கோஷம் விண்ணை பிளந்தது.

அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை காண மதுரையே விழாக்கோலம் பூண்டது. இன்று பிற்பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறும். பிறகு இரவு 9 மணிக்கு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.

மே 2ஆம் தேதி காலை 11.30 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை, வண்டியூர் வைகை ஆற்றுக்குள் அமைந்துள்ள தேனூர் மண்டகப்படியில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி இடம்பெறும். அன்றைய தினம் இரவு 11 மணிக்கு மேல் ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய நடைபெறும். இந்த நிகழ்வு பக்தர்களை இரவு முழுவதும் ஆன்மீகத்தில் திளைக்கச் செய்யும். மே 4ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறும். அதைத் தொடர்ந்து, தல்லாகுளத்தில் உள்ள மன்னர் சேதுபதி மண்டபத்தில் இருந்து பூப்பல்லக்கில் அழகர் மலை நோக்கி கள்ளழகர் புறப்படுவார். இறுதியாக, மே 5ஆம் தேதி காலை 10.40 – 11.10 மணிக்குள் கள்ளழகர் அழகர் மலைக்கு சென்றடைந்து திருவிழா நிறைவு பெறும்.
