ஹரி புரூக் தனித்துப் பெற்ற 135 ஓட்டங்களையும் வீணடித்து இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.நியூசிலாந்தின் மௌண்ட் மங்கானுயில் நேற்று (26) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி 56 ஓட்டங்களுக்கு முதல் ஆறு விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
எனினும் அணித் தலைவர் புரூக் தணித்து ஆடி அணியை மீட்டார். அவர் 101 பந்துகளில் 9 பௌண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களுடன் 135 ஓட்டங்களை பெற்றார்.இதன்மூலம் இங்கிலாந்து அணி 35.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்களை பெற்றது. அதிரடியாக பந்து வீசிய சகரி கோக்ஸ் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இந்நிலையில் பதிலெடுத்தாடிய நியூசிலாந்து பெரிதாக நெருக்கடி இன்றி 36.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 224 ஓட்டங்களை எட்டியது. டரில் மிட்சல் ஆட்டமிழக்காது 78 ஓட்டங்களையும் மைகல் பிரேஸ்வெல் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.இந்த வெற்றியுடன் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹமில்டனில் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
