நெல்லையில் இளைஞர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. கொலை செய்த கவினின் காதலியின் சகோதரரான சுர்ஜித் மீது மீது குண்டர் சட்டம் போடப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சுர்ஜித்தின் தந்தை காவல் உதவி ஆய்வாளர் சரவணனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் தெற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் (27). கவினும், நெல்லை கே.டி.சி. நகரைச் சேர்ந்த சுபாஷினியும் பள்ளிப் பருவத்தில் இருந்தே பழகி வந்துள்ளனர். இவர்களது இந்த நட்பானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
ஐடி ஊழியரான கவின் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு கடந்த ஜூலை 27 ஆம் தேதி வந்திருந்த நிலையில், சுபாஷினியின் தம்பி சுர்ஜித், கவினை பேச வேண்டும் என்று அழைத்துச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் சுர்ஜித் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், சுர்ஜித்தின் தந்தை மற்றும் தாயாருக்கு இந்த கொலையில் சம்பந்தம் இருப்பதாக புகார் தெரிவித்த கவினின் பெற்றோர், உறவினர் அவர்களை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர்களான சுர்ஜித்தின் தந்தை சரவணன் மற்றும் தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சுர்ஜித்தின் பெற்றோரை 2 வது, 3 வது குற்றவாளிகளாக முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, இந்த வழக்கை தமிழக அரசு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது. வழக்கின் விரிவான விசாரணைக்காக சுர்ஜித் மற்றும் அவரின் தந்தையை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்தது. இதைத்தொடர்ந்து, அந்த மனுவின் மீதான விசாரணையில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை கவின் கொலை வழக்கில் கைதான சுர்ஜித் மற்றும் அவரின் தந்தை சரவணனை 2 நாள்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

