எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்து கணவர் வீட்டில் இருந்த பெண்ணை பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி ஒரு கும்பல் கடத்திச் சென்ற நிலையில் அந்த பெண் பத்திரமாக மீட்கப்பட்டார்.சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் செட்டிமாங்குறிச்சி கிராமம் சின்னதாண்டவனூரை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் தனுஷ்கண்டன் (25). இவர் ஓசூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து
வருகிறார் இந்த நிலையில் தனுஷுக்கு, தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த சின்னம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த குமாரின் மகள் ரோஷினிக்கும் (22) காதல் ஏற்பட்டது. இருவரும் ஒரே இடத்தில் பணியாற்றியவர்கள். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் தேதி இருவரும் கோயிலில் திருமணம் செய்து கொண்டு எடப்பாடி காவல் நிலையத்தில்
பாதுகாப்பு கோரி தஞ்சமடைந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் தங்கள் காதலுக்கு எதிர்ப்பு வந்துள்ளது என்றனர். இருவரும் திருமண வயதை எட்டியிருந்ததால் போலீஸார் அவர்களது பெற்றோரை வரவழைத்து இரு தரப்பையும் சமாதானம் செய்து புதுமணத்தம்பதியை அனுப்பி வைத்தனர். அதன்படி ரோஷினி, கணவர் தனுஷ் வீட்டில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை தனுஷ் வீட்டிற்கு ஒரு கார் வந்துள்ளது. அந்த காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல் கையில் கத்தியுடன் தனுஷ் வீட்டிற்குள் நுழைந்தது. வீட்டில் இருந்தவர்கள், தடுத்த போதும் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டினர பிறகு அங்கிருந்த ரோஷினியை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றனர். வீட்டிலிருந்தவர்களின் கூச்சல் கேட்டு அக்கம்பக்கத்தினர் தடுக்க முயன்ற போது, ரோஷினியின் கழுத்தில் கத்தியை வைத்து அந்த கும்பல் கடத்தி சென்றது. இந்த
சம்பவத்தால் பதறி போன தனுஷ், எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது கடத்தப்பட்ட பெண் ரோஷினி, கர்ப்பமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். பெண்ணை அந்த கும்பல் வாகனத்தில் கடத்திய போது அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் காட்சிகள் பதிவாகியுள்ளன அந்த சிசிடிவி கேமராவில் பக்கத்து வீட்டு பெண் தடுக்க முயன்ற போது கத்தியை காட்டியதால் அவர் அலறியடித்துக் கொண்டு ஓடுவது போல் பதிவாகியுள்ளது. அந்த பெண் காப்பாற்றுமாறு கத்துகிறார். ஆனால் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டினார்கள். இதையடுத்து வீட்டிற்குள் இருந்து ரோஷினியை தரதரவென இழுத்து வந்து காரில் ஏற்றுகிறார்கள்.
அப்போது ஒரு பெரியவர் தடுக்க பார்க்கிறார், ஆனால் அந்த பெரியவரை கத்தியால் மிரட்டுகிறார்கள் அந்த கும்பல். இதையடுத்து கார் படு ஸ்பீடாக பறக்கிறது. அங்கு ஒரு வளைவில் நிறைய பேர் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது பாயும் வகையில் வந்த காரை பார்த்து அவர்கள் எல்லாம் தெறித்து ஓடுகிறார்கள். இதையடுத்து கண் மூடி திறப்பதற்குள் கார் போய்விடுகிறது. இந்த நிலையில் புகாரின் பேரில் காரின் எண்ணை வைத்து உரிமையாளரை கண்டுபிடித்த போலீஸார், கடத்தப்பட்ட ரோஷினியையும் மீட்டு கணவர் குடும்பத்திடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் யார் என்பது குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இதுகுறித்து எடப்பாடி போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். 24 மணி நேரத்திற்குள் பெண்ணை மீட்ட காவல் துறைக்கு பாராட்டுகள் குவிகின்றன.
