தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயிலில் நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி, உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்தநிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயிலில், கடந்த 1985 ஆம் ஆண்டு நன்கொடையாளர்கள் மூலம் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டதுதான் யானை காந்திமதி. தற்போது காந்திமதி யானைக்கு 56 வயதான நிலையில், வயது முதிர்வு காரணமாக மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டிருந்தன.
இதற்காக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மூட்டு வலி தொடர்பான சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வருகிறது என்றபோதிலும், கடந்த மாதத்தில் மூட்டு வலி அதிகமாகி உள்ளது. மருத்துவர்களும் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த சூழலில் கடந்த ஒரு மாத காலமாக யானை காந்திமதி படுக்காமல் நின்றவாரே தூங்கி, அன்றாட பணிகளை மேற்கொண்டு வந்தது.
ஒருவழியாக நேற்று அதிகாலை காந்திமதி யானை படுத்து தூங்கிய நிலையில் நேற்று காலை மீண்டும் அதனால் எழ முடியவில்லை. இதனால், கால்நடை மருத்துவர்கள் வரவைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இதற்காக நேற்று மாலையில் 2 பெரிய கிரேன்கள் கோவிலுக்குள் கொண்டு வரப்பட்டன.
அந்த கிரேன்கள் மூலம் யானையின் உடலில் பெல்ட் கட்டி தூக்கி நிறுத்தினார்கள் மருத்துவர்கள். சிறிது நேரம் நின்றிருந்த யானை மீண்டும் கீழே படுத்துக்கொண்டது. யானைக்கு தொடர்ந்து மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
நித்திய பூஜைக்கு பின் நெல்லையப்பர் கோவில் நடை அடைக்கப்பட்டுள்ளது. யானையின் இறுதிச் சடங்கு முடியும் வரை கோவிலுக்குள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்றும் பரிகார பூஜைகளுக்கு பின் கோவில் நடை திறக்கப்படும் என்றும் நெல்லையப்பர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் காலை 11 மணியிலிருந்து பக்தர்கள் யானைக்கு அஞ்சலி செலுத்த பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
