அலட்சியம் வேண்டாம்: வளர்ப்பு நாய்களால் ரேபிஸ் தொற்று ஏற்படாது என்றே பலரும் அலட்சியமாக இருக்கின்றனர். இதில் உண்மை இல்லை. 2018 முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டு களில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த 121 ரேபிஸ் மரணங்களில் 51 மரணங்கள் வளர்ப்பு நாய்க்கடிகளால் ஏற்பட்டுள்ளன.
கடியின் வகைகள் நாய்க்கடி, பூனைக்கடி விஷயத்தில் முக்கியமானது கடியை வகைப் படுத்துவதாகும். முதலாம் வகை
விலங்கைத் தொடுவது,
விலங்குக்கு உணவு வழங்குவது,
காயம் ஏற்படாத நல்ல நிலையில் உள்ள தோலில் விலங்கு நக்குவது, காயம் ஏற்படாத நல்ல நிலையில் உள்ள தோலில் விலங்கின் எச்சில் அல்லது சிறுநீர் உள்ளிட்ட எச்சங்கள் படுவது.
மேற்கூறியவற்றால் ரேபிஸ் நோய் பரவுவதில்லை. எனவே, இவர்களுக்கு எந்தச் சிகிச்சையும் தேவையில்லை. இரண்டாம் வகை:
சிறிய அளவு பிராண்டல், பல் பதியாத அளவு சிறிய அளவு கடி என்றால், கடிபட்ட இடத்தைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். அதனுடன் ரேபிஸ் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்.
மூன்றாம் வகை:
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் ரத்தம் வெளியேறுமாறு தோல் முழுமையையும் உள்ளடக்கிய கடி, பிராண்டல், காயம் ஏற்பட்ட இடத்தில் நக்கப் படுதல், கண், வாய் உள்ளிட்ட இடங்களில் விலங்கின் எச்சில் படுவது ஆகியன மூன்றாம் நிலைக் கடியாகும்.
கடிபட்ட இடத்தைக் கழுவுதல், ரேபிஸ் தடுப்பூசியைப் பெறுதல் ஆகியவற்றுடன் கடிபட்ட இடத்தில் ரேபிஸ் இம்யூனோகுளோபுலின் ஊசி கட்டாயம் செலுத்தப்பட வேண்டும்.
சிகிச்சைகள்: கடிபட்ட பிறகு உடனே செய்ய வேண்டியது தண்ணீர்க் குழாயைத் திறந்துவிட்டுக் காயம்பட்ட இடத்தை ஓடும் நீரில் நன்றாக சோப் போட்டுத் தேய்த்து 15 நிமிடங்கள் கழுவ வேண்டும். பிறகு கடிபட்ட இடத்தில் போவிடோன் அயோடின் போன்ற கிருமி நாசினியைப் பயன்படுத்தலாம்.
மூன்றாம் வகைக் கடியாக இருந்தால், கடித்த இடத்தைச் சுற்றி ரேபிஸ் இம்யூனோகுளோபுலின் ஊசியைக் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும். கூடவே டெட்டானஸ் தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ள வேண்டும். கடிபட்ட இடத்தில் வைரஸ் இருக் கும் என்பதால், கடிபட்ட இடத்தைக் கட்டாயம் வெறும் கையால் தொடக் கூடாது. காயத்தின் மீது மண், காபித் தூள், எலுமிச்சை, மூலிகைகள், வெற் றிலை போன்றவற்றைத் தடவக் கூடாது.
கவனிக்க வேண்டியவை: எச்.ஐ.வி. நோயாளிகள், புற்று நோய், கீமோதெரபி சிகிச்சையில் இருப்பவர்கள், எதிர்ப்புச் சக்தி குன்றியோர், ஸ்டீராய்டு மாத்திரைகள் உட்கொள்பவர்கள், ஹைட்ராக்சி குளோரோகுயின் – மலேரியா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் குளோரோ குயின் போன்ற மாத்திரைகளை உட்கொள்வோர் ஆகியோருக்கு இரண்டாம் வகைக் கடி ஏற்பட்டிருந் தாலும், அதை மூன்றாம் வகைக் கடியாகக் கருத்தில் கொண்டு ரேபிஸ் தடுப்பூசியுடன் கட்டாயம் ரேபிஸ் இம்யூனோகுளோபுலின் செலுத்தப்பட வேண்டும்.
காரணம், ரேபிஸ் தடுப்பூசி மட்டுமே இவர்களுக்கு எதிர்ப்புச் சக்தி\யைப் போதுமான அளவு வழங்காது. ரேபிஸ் தடுப்பூசி, இம்யூனோ குளோபுலின் – அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாகச் செலுத்தப்படுகின்றன.
கடிபட்ட இடத்தில் ரத்தம் வந்ததென்றால் அதை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். மருத்துவர் கடியைச் சரியாக வகைப்படுத்து வதற்கு இந்தத் தகவல் துணையாக இருக்கும். எவ்வளவு சீக்கிரம் தடுப்பூசியைப் பெறுகிறோமோ, அவ்வளவு நல்லது. உள்ளே சென்ற வைரஸ் மூளையை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கும் முன் எதிர்ப்பு மருந்தை வழங்கியாக வேண்டும்.
தவணை முறை: முதல் தவணை (0 நாள் – கடிபட்ட நாள்) அதிலிருந்து மூன்றாவது நாள், பின் ஏழாம் நாள், பின் இருபத்தி எட்டாம் நாள் என்று மருத்துவமனைக்குச் சென்று தோலினூடே வழங்கப்படும் ஊசியை நான்கு தவணைகள் முறை யாகச் செலுத்திக்கொள்ள வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளில் தசை வழி வழங்கப் படும் ரேபிஸ் தடுப்பூசி பெறு பவர்கள் முதல் தவணை (0 நாள்), அதிலிருந்து மூன்றாவது நாள், பின் ஏழாம் நாள், பின் பதினான்காம் நாள், அதன் பின் இருபத்தி எட்டாம் நாள் என்று ஐந்து தவணைகள் சென்று தசைக்குள் வழங்கப்படும் ஊசியை முறையாகச் செலுத்திக்கொள்ள வேண்டும்.
தடுப்பூசி பெறும் இந்த ஒரு மாத காலத்தில் உணவுப் பத்தியம் ஏதுமில்லை. இறைச்சி, மீன், முட்டை உள்ளிட்ட அனைத்தையும் சாப்பிடலாம். வீட்டில் செல்ல நாய்கள், பூனைகளை வளர்ப்பவர்கள் கட்டாயம் அவற்றுக்கு வருடாந்திர ரேபிஸ் தடுப்பூசியை முறையாக செலுத்திவர வேண்டும். கூடவே தாங்கள் வளர்க்கும் நாயையும் பூனையையும் தெரு நாய் – பூனை களுடன் கலந்து விடாதவாறு பராமரிப்பதும் அவர்களின் கடமை.
தடுப்பூசி பெறப்பட்ட நாய், பூனை கடித்தாலும் பிராண்டினாலும் மனிதர்களுக்கு ரேபிஸ் தொற்று ஏற்படும் ஆபத்து அரிதாக உள்ளது. எனவே, கடித்தது நாம் வளர்க்கும் செல்ல நாயாக இருந்தாலும் சரி, அதற்கு ரேபிஸ் தடுப்பூசி போடப் பட்டிருந்தாலும் சரி, கடிபட்டவருக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது.
நாய்க்கடிக்குப் பின்பான ரேபிஸ் தடுப்பூசி அட்டவணையை ஒருமுறை சரியாக முடித்தவர்கள் (கட்டாயம் அதற்கான ஆவணத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்), அதற்குப் பின்பு மூன்று மாதங்களுக்குள் மற்றொரு கடிபட்டால் அவர்களுக்குக் காயம் பட்ட இடத்தைச் சுத்தம் செய்தல் உள்ளிட்ட சிகிச்சை பெற்றால் போதுமானது.
ரேபிஸ் தடுப்பூசியை மீண்டும் செலுத்திக் கொள்ளத் தேவையில்லை. முந்தைய முழு அட்டவணை தடுப்பூசிகளைப் பெற்று மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் புதிதாகக் கடிபட்டிருந்தால், முதல் தவணை (0 நாள்), மூன்றாம் நாள் ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் போதுமானது. இவர்களுக்கு இம்யூனோகுளோபுலின் தேவையில்லை.
முன்கூட்டிய ரேபிஸ் தடுப்பூசி: விலங்கு நல ஆர்வலர்கள், மருத்துவர்கள், நாய் வளர்ப்போர், நாய்களைப் பிடிப்பவர்கள், அதிக மான தெருநாய்கள் இருக்கும் பகுதி களில் வாழ்பவர்கள் ஆகியோர் முன்கூட்டிய ரேபிஸ் தடுப்பூசி பெறுவது குறித்துச் சிந்தித்து முடிவெடுக்கலாம். ரேபிஸ் 100% மரணத்தை விளைவிக்கக் கூடிய கொடூர நோயாக இருப்பினும் முறையான விரைவான சிகிச்சை பெறுதல், தடுப்பூசி பெறுதல் ஆகியவை உயிர்களைக் காக்கக்கூடிய நடவடிக்கைகளாகும்.
எந்தவொரு விலங்குக் கடியையும், அது நாய்க் கடியோ பூனைக்கடியோ அதன் சிறு பிராண்டலையும் துச்சமெனக் கருதாமல், அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று அதற்குரிய சிகிச்சையையும் தடுப்பூசியையும் பெறுவோம். ரேபிஸ் நோயால் ஏற்படும் மரணங்களைத் தடுத்திடுவோம்.
