டிசெம்பர் மாதம் முழு நாடும் ரணில் விக்ரமசிங்கவை தேடும் நாட்டில் எதிர்வரும் டிசெம்பர் மாதம் வரிசை யுகம் மீண்டும் தோற்றம்பெறும் எனவும், அப்போது முழு நாடும் ரணில் விக்கிரமசிங்கவை தேடும் எனவும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் ”ஜனாதிபதி உள்ளிட்ட ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சி தலைவரை விமர்சிப்பதில்லை. அவர் அப்பதவியில் இருப்பதை ஆளுங்கட்சி விரும்புகின்றது. ஏனைய தலைவர்களையும் விமர்சிப்பதில்லை.
ஆனால் ரணில் விக்கிரமசிங்கவை இலக்குவைத்தே ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் விமர்சனக் கணைகளைத் தொடுத்துவருகின்றனர்.
கிராமப்பகுதிகளில் உள்ள ஜே.வி.பியினரும் ரணிலையே விளாசித்தள்ளுகின்றனர். ஏனெனில் ரணில் வந்துவிடுவார் என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது.
மே மாதம் வரும்போது பொருளாதாரப் பிரச்சினை தலைதூக்க ஆரம்பிக்கும். ஆகஸ்ட் மாதமளவில் அது உக்கிரமடையும். டிசெம்பர் மாதம் ஆகும்போது வரிசைகள் தோற்றம்பெறும். அப்போதுதான் அறகலய வெடிக்கும். அப்போது நாட்டை மீட்டு, எங்களை பாதுகாக்கவும் என முழு நாடும் ரணிலிடம் கோரிக்கை விடுக்கும்.” என தெரிவித்துள்ளார்.
