பிரான்ஸிடம் இருந்து ரூ.63,000 கோடியில் 26 ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தமிட்டுள்ள இந்தியா. நாளுக்கு நாள் அதிகரிக்கும் போர் பதற்றம்.காஷ்மீர் பஹல்காமில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தானுக்கிடையேயான போர் பதற்றம் அதிகரிக்கும் சூழல் காணப்படுகிறது. இந்தநிலையில், பிரான்ஸிடமிருந்து ரூ.63000 கோடியில் 26 ரபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா நேற்றைய தினம் கையெழுத்திட்டுள்ளது.கடந்த ஜூலை 2023 இல், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்தியாவின் பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் (DAC), இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான முன்மொழிவை அங்கீகரித்தது.இதற்கான பேச்சுவார்த்தை பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்துடன் மத்திய அரசு நடத்திவந்தது. இந்த நிலையில், பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தநிலையில் தற்போது ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, 22 ரபேல்-எம் விமானங்கள் ஒற்றை இருக்கையுடன் கூடியதாகவும், 4 விமானங்கள் இரண்டு இருக்கைகளுடன் கூடிய பயிற்சி விமானமாகவும் இருக்கும். இவற்றில் சில ஆயுதங்கள், சிமுலேட்டர்கள் இருக்கும். மேலும் விமானங்களின் பராமரிப்பு, தளவாட ஆதரவு மற்றும் பணியாளர் பயிற்சி ஆகியவற்றையும் தஸ்ஸோ நிறுவனம் வழங்கும்.
இதன் விநியோகம் அடுத்த சில ஆண்டுகளில் தொடங்கும் என்றும் 2031-க்குள் அனைத்து விமானங்களும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.உலக அளவில் மிகவும் திறமையான போர் விமானங்களில் ஒன்றாக கருதப்படும் ரபேல் – எம் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங்கும் தஸ்ஸோர் நிறுவன உயர் அதிகாரியும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ஆகிய போர்க்கப்பல்களில் இருந்து இப்போது செயல்படும் மிக்-29-கே ரக போர் விமானங்களுக்கு பதிலாக இந்த ரபேல்-எம் போர் விமானங்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றும் கூறப்படுகிறது.
