ஆதாரங்களுடன் CIDயிடம் வெளிப்படுத்திய பிள்ளையானின் சகா ஹுசைன்

Pillaian-cid.jpeg

பிள்ளையானின் கடந்த காலத்தை ஆதாரங்களுடன் CIDயிடம் வெளிப்படுத்திய முன்னாள் சகா ஹுசைன்! பிள்ளையான்’ என்று பரவலாக அறியப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஏப்ரல் 08ஆம் திகதி மட்டக்களப்பில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்ட பின்னர், ஏப்ரல் 12, 2025 அன்று பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் 2006ஆம் ஆண்டு பல்கலைக்கழக துணைவேந்தர் கடத்தப்பட்டு காணாமல்போனமை தொடர்பாக அவர் கைதானதாக அரசாங்கம் தெரிவித்தது.

ஆட்கடத்தல் குற்றச்சாட்டுக்கப்பால் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கும் பிள்ளையானுக்கும் தொடர்பிருக்கிறதா என்பது தொடர்பில் இப்போது தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் சம்பந்தப்பட்ட வழக்குகள், சம்பவங்கள் குறித்து ஆராய்ந்து தகவல்களைப் பெறுவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவொன்று இந்த நாட்களில் மட்டக்களப்பில் முகாமிட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பிள்ளையான் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவங்களுக்கும் பிள்ளையானுக்கும் தொடர்புகள் இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவும் அண்மையில் பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இந்தச் சூழ்நிலையில் சி.ஐ.டியின் விசேட குழுவொன்று மட்டக்களப்புக்கு விரைந்து அங்கு முக்கிய தகவல் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. பிள்ளையான் புலிகளிடமிருந்து பிரிந்து வந்து மாதுறு ஓயா இராணுவ முகாமில் படைகளின் பாதுகாப்புடன் தங்கியிருந்துகொண்டு ஆட்கடத்தல் மற்றும் கொலைகளைப் பின்னின்று இயக்கினாரா என்பது குறித்தும் அது தொடர்பான ஆதாரங்கள் உள்ளனவா என்பது பற்றியும் மேற்படி சி.ஐ.டி. குழு துப்புத் துலக்கி வருகிறது.

பிள்ளையான் தொடர்புபட்டார் என்று சொல்லப்படும் ஆட்கடத்தல் சம்பவங்கள், மிரட்டல் மற்றும் கப்பம் பெற்றமை தொடர்பில் அரசியல் சமூகத்தைச் சார்ந்த பிரமுகர்கள் சிலர் சில ஆவணங்களை இந்த சி.ஐ.டி. குழுவிடம் வழங்கியுள்ளதாகவும் அறியமுடிந்தது.அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மனித உரிமை ஆர்வலருமான மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு 07.02.2005 அன்று மட்டக்களப்பு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியான புனானை பகுதியில் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்தும் பல முக்கிய தகவல்கள் மேற்படி சி.ஐ.டி. குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிந்தது.

ஜனாதிபதி அநுரகுமார அண்மையில் பொதுக்கூட்டமொன்றில் பேசும்போது, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நினைவு தினமான ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் அந்தச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி கைதுசெய்யப்படுவாரென்ற சாரப்படக் கூறியிருந்தார். அதற்கு முன்னதாகவே இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.

இதற்கிடையில் வெள்ளிக்கிழமை 18ஆம் திகதி கருத்து வெளியிட்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பிள்ளையானின் நெருங்கிய சகா ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்து கடந்த காலங்களில் இடம்பெற்ற பல சம்பவங்களை விலாவாரியாக விபரிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.சிக்கியவர் யார் ?

பிள்ளையானுடன் கடந்த காலங்களில் நெருங்கிச் செயற்பட்ட ஒருவரான ரவீந்திரன் குகன் அல்லது ஹுசைன் என்பவர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் வலையில் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது.

கடந்த வியாழன் சி.ஐ.டியின் விசேட குழுவால் அவர் மட்டக்களப்பில் பல மணிநேரம் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார் என்று அறியமுடிந்தது. பாதுகாப்புத் துறையின் புலனாய்வு உத்தியோகத்தராக செயற்பட்ட மேற்படி நபர், காத்தான்குடி மற்றும் தாழங்குடா பகுதியில் வசித்து வந்தவர். பிள்ளையானுடன் நெருங்கிச் செயற்பட்ட இவர், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னதாக ஆசாத் மெளலானா தெரிவித்த அதே ஒத்த விடயங்களை சி.ஐ.டி. விசாரணை அதிகாரிகளிடம் பகிர்ந்திருப்பதாக அறியமுடிந்தது. அதேபோல் பின்வரும் முக்கிய தகவல்களையும் மேற்படி குகன் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார்.

2007ஆம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற கடத்தல்கள், கொலைகள் போன்றவற்றுக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் வெலிக்கந்தை தீவுச்சேனை பகுதியில் புதைக்கப்பட்டமை, கொல்லப்பட்டோரின் உடல்கள் எரிக்கப்பட்ட இடங்களை அடையாளம் காட்ட முடியுமென தெரிவித்துள்ளமை.
2008இல் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினரான சாந்தன் என்பவர் பட்டப்பகலில் சப்பாத்துக் கடையொன்றினுள் வைத்து முஸ்லிம்கள் என அடையாளப்படுத்தும் இருவரால் சுட்டுக் கொல்லப்படுகின்றார். குகன் (ஹுசைன்) என்ற தானும் பொலிஸ் ஃபாஹிஸ் என்பவரும் இதனை மேற்கொண்டோம். சாந்தன் எனும் நபர் கொல்லப்பட்டு ஒரு வாரத்துக்குள் தமிழ்க் குழுவொன்று காத்தான்குடிக்குச் சென்று அங்கு 13 பேர் கொல்லப்படுகின்றனர். இதனூடாக காத்தான்குடி கிழக்கு மாகாணத்தில் ஸ்திரமற்ற நிலையொன்று ஏற்பட்டது. இது 2008 மாகாண சபைத் தேர்தலை அடிப்படையாகக்கொண்டு தேர்தலுக்கு முன்னதாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும்.
2005ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் கொலையுடன் தொடர்புடைய பிள்ளையானுடன் கைதுசெய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்து சில நாட்களில் திடீரென உயிரிழந்தார். மரண விசாரணை முன்னெடுக்கவேனும் இடமளிக்காமல் அவரது சடலத்தை எரித்துவிட்டனர். வாழைச்சேனையில் அவர் தனியாக இருந்தபோது அவருக்கு விஷத் திரவம் பருக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் நீதியான விசாரணை கோரியபோதும் அவை நிராகரிக்கப்பட்டன. இதிலும் முக்கியமான பிரமுகர்களுக்குத் தொடர்புண்டு.
2007ஆம் ஆண்டு சதீஸ்குமார் சந்திரராசா எனும் நபர் கொலை செய்யப்படுகின்றார். மட்டக்களப்பு, கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்த அவரது மகளான தனுசியா சதீஸ்குமார் என்ற எட்டு வயதுச் சிறுமி 28.04.2009 அன்று கடத்தப்பட்ட நிலையில், பின்னர் கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்படுகிறார். 30 மில்லியன் ரூபாவுக்காகவே இச்சிறுமி கடத்தப்பட்டார். இச்சிறுமியின் கொலையுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்யுமாறு மட்டக்களப்பில் 25 மாணவர்கள் தொடர்ந்து ஒன்பது நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்தின் பின்னர் இருவர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
அதில் ஒருவர் கந்தசாமி ரதீஸ்குமார். மற்றையவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் புலனாய்வுத்துறை பிரதானி திவ்யசீலன். இவர்கள் இருவரும் இராணுவப் புலனாய்வுத் துறையின் அப்போதைய கேர்னல் நிஜாப் முத்தலிப்பின் கீழ் பணியாற்றியவர்களாவர். கைதுசெய்யப்பட்ட இந்த இருவர் உள்ளிட்ட நால்வரும் ஊரணி அல்லது கல்வியங்காடு பகுதியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் பின்னணியிலும் அரசியல் சக்தி இயங்கியது.

2006 ஜனவரி 31ஆம் திகதி மட்டக்களப்பிலிருந்து வவுனியாவுக்கு டி.ஆர்.ஓ. என்ற அமைப்பிலிருந்து சென்றவர்களை வெள்ளை வானில் கடத்திச்சென்று பெண்கள் உள்ளிட்டோரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திக் கொலை செய்கின்றனர். அதில் தனுஸ்கோடி பிரேமினி, கணக்காளர் சண்முகநாதன் சுவேந்திரன், தம்பிராஜா வசந்தராஜா, கைலாயப்பிள்ளை ரவீந்திரன் உள்ளிட்ட பத்து பேர் இருந்தனர்.
2006 டிசம்பர் 15ஆம் திகதி கிழக்கு மாகாண முன்னாள் துணைவேந்தர் எஸ்.ரவீந்திரநாத் கொழும்பு பெளத்தாலோக மாவத்தையில் வைத்து கடத்தப்பட்டு கொலைசெய்யப்படுகிறார். இதற்கு முன்னர் கருணா பிள்ளையான் குழுவினரால் பாலசுகுமாரன் என்ற முன்னாள் பேராசிரியர் கடத்தப்பட்டிருந்ததுடன், துணை வேந்தரையும் அப்தவியிலிருந்து விலகுமாறு எச்சரிக்கப்பட்டிருந்தது. அவர் அப்பதவியிலிருந்து விலகாமையினாலேயே அவர் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.
2009 மே மாதம் மெனிக்பாம் முகாமிலிருந்து மட்டக்களப்புக்கு வந்த 30 பேரை கடத்திச் சென்று சுட்டுக்கொன்று காத்தான்குடி கடலில் போட்டமை .
இப்படியான பல அதிர்ச்சிகரமான தகவல்களை மேற்படி குகன் என்பவர் சி.ஐ.டி. விசாரணைக்குழுவிடம் தெரிவித்திருக்கிறார். வியாழன் இவரிடம் வாக்குமூலத்தைப் பதிவுசெய்துள்ள சி.ஐ.டி அதிகாரிகள் அவரை வியாழன் இரவு கொழும்புக்கு அழைத்து வந்துள்ளனர்.தேசிய புலனாய்வுத் துறையின் பணிப்பாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் ஏற்கனவே ஆசாத் மெளலானா தெரிவித்திருந்த அதே விடயங்களையும் இந்தப் பிரமுகர் கூறியிருப்பதால் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து புதிய கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிர்த்த தினத் தாக்குதல் சம்பவத்தில் சுரேஷ் சாலேயை கைதுசெய்யவேண்டும் என்பதுதான் பேராயர் மெல்கம் ரஞ்சித் உட்பட்ட பலரின் வலியுறுத்தலாக இருக்கிறது. சலேவுக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்புகள் இருப்பதாக எந்த ஆதாரபூர்வமான தகவல்களும் விசாரணையாளர்களுக்குக் கிடைக்கவில்லை. இதனால் சம்பந்தமில்லாமல் சுரேஷை கைதுசெய்து நீதிமன்ற விவகாரங்களில் சிக்கிக்கொள்ளாதிருக்க பாதுகாப்புத்துறை கவனமாக செயற்படுவதாக தகவல். புலிகளிலிருந்து பிள்ளையான் பிரிந்துவந்த பின்னர் அவர்களுக்குத் தேவையான வசதிகளை பாதுகாப்பை செய்துகொடுத்தது.

இலங்கை இராணுவத்தின் புலனாய்வுத் துறை என்பது உலகறிந்த விடயம். அப்போது பிள்ளையானுக்கும் சுரேஷ் சலேவுக்கும் இருந்த தொடர்பாடல்களை மட்டும் சாட்சியமாக வைத்து சலேவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துவிட முடியாதென்ற நிலையில் இருக்கிறது பாதுகாப்புத்துறை. அதுமட்டுமல்ல, சலேவுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டால் அரச புலனாய்வுத்துறை கட்டமைப்பில் தாக்கங்கள் ஏற்படலாம். இப்போதுள்ள புலனாய்வுத்துறை அதிகாரிகளும் அதனால் சோர்வடையலாம் என்றவொரு அச்சம் அரச மேல்மட்டத்துக்கு ஏற்பட்டுள்ளது.எவ்வாறாயினும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீது புதிய புதிய வழக்குகள் பாயுமானால் அவர் இப்போதைக்கு விடுதலையாகும் வாய்ப்பில்லை. அதிகபட்ச வழக்குகள் வரும்போது சிலசமயம் அவர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கக்கூடும் என்று விசாரணையாளர்கள் எதிர்பார்க்கலாம். அப்படி நடக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

The current image has no alternative text. The file name is: Pillaian-cid.jpeg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *