முன்னாள் மலேசியப் பிரதமர் அப்துல்லா அகமது படாவி காலமானார் பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமது படாவி காலமானார். அவருக்கு வயது 85 மலேசியாவின் தேசிய இதய நிலையத்தில் திங்கட்கிழமை (ஏப்ரல் 14) இரவு 7.10 மணியளவில் திரு அப்துல்லாவின் உயிர் பிரிந்ததாக அவருடைய மருமகன் கைரி ஜமாலுதீன் இன்ஸ்டகிராம் வழியாகத் தெரிவித்தார்.
மூச்சுவிடச் சிரமப்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை காலை திரு அப்துல்லா தீவிர பராமரிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகத் தேசிய இதய நிலையம் குறிப்பிட்டது.
“அவரைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்தபோதும், தம் அன்புக்குரியவர்கள் சூழ்ந்திருந்த நிலையில் அமைதியாக அவரது உயிர் பிரிந்தது,” என்று அம்மருத்துவமனை ஓர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது.
சென்ற ஆண்டு ஏப்ரலிலிலும் நுரையீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட அவர், தேசிய இதய நிலையத்தின் தீவிர பராமரிப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் அதிலிருந்து மீண்டார்.
டாக்டர் மகாதீர் முகம்மது 22 ஆண்டுகாலம் மலேசியப் பிரதமராகப் பதவி வகித்தபின், 2003ஆம் ஆண்டு திரு அப்துல்லா அப்பொறுப்பை ஏற்றார்.தமது ஆட்சிக்காலத்தின்போது தேசிய மனித மூலதனக் கொள்கையை அறிமுகப்படுத்தியதால் திரு அப்துல்லா மலேசியாவின் ‘மனித மூலதன வளர்ச்சியின் தந்தை’ என்றழைக்கப்பட்டார்.
திரு அப்துல்லா கடந்த சில ஆண்டுகளாக நினைவாற்றல் இழப்பால் பாதிக்கப்பட்டிருந்தார். தம்முடைய குடும்பத்தினரின் பெயர்கள்கூட அவர்களுக்கு நினைவில் இல்லை எனக் கூறப்பட்டது.
சென்ற ஆண்டு ஏப்ரலில் நுரையீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட அவர், ஐஜேஎன் மருத்துவமனையின் தீவிர பராமரிப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் அதிலிருந்து மீண்டார்.
