அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து டிரம்ப் எழுதிய கடிதத்திற்கு இரானின் பதில் என்ன அணுசக்தி திட்டம் தொடர்பான புதிய ஒப்பந்தத்திற்கு இரானின் அதிஉயர் தலைவரான அயதுல்லா அலி காமனேயிக்கு புதன்கிழமை ஒரு கடிதம் எழுதியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
அதில், அணுசக்தி திட்டம் தொடர்பான புதிய ஒப்பந்தத்திற்கு உடன்படுவதற்காக இரானின் அதிஉயர் தலைவரை அவர் அழைத்துள்ளார்.
அதைத் தொடர்ந்து இரான் பேச்சுவார்த்தையில் இணையவில்லை என்றால், இரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதைத் தடுக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அத்தகைய கடிதம் எதுவும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இரானின் தூதரகம் கூறியுள்ளது.இரானுடன் பேச்சுவார்த்தையின் மூலம் ஓர் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நான் விரும்புகிறேன். இரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது,” என்று வெள்ளிக்கிழமையன்று ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறினார்.கடந்த 2017ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபராகத் தேர்வு செய்யப்பட்டதற்குப் பின்னர், இரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள டிரம்ப் ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்தார்.
இது மட்டுமின்றி அமெரிக்கா, இரானின் முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி, நிதி பரிவர்த்தனைகள் மற்றும் பிற துறைகள் மீது கடுமையான தடைகளை விதித்தது. மேலும், பிற நாடுகளுடன் இரான் வணிகம் செய்வதையும் கடினமாக்க முயன்றது.
முன்னதாக டிரம்ப் நிர்வாகத்தின் உத்தி, இரானுக்கு ‘அதிகபட்ச அழுத்தம்’ கொடுப்பதாக இருந்தது. தனது இரண்டாவது பதவிக் காலத்திலும், டிரம்ப் இதே உத்தியைத் தொடர்கின்றார். அதேநேரத்தில், அவர் மென்மையான அணுகுமுறையின் அறிகுறிகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.
டிரம்ப் கூறியது என்ன?
இரானின் கைகளுக்கு அணு ஆயுதங்கள் கிடைப்பதைத் தடுப்பதாக, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றது முதல் டிரம்ப் தொடர்ச்சியாகப் பலமுறை கூறி வந்துள்ளார். இருப்பினும் இரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் இதில் ஓர் ஒப்பந்தத்தை எட்ட முயல்வதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள், பிப்ரவரி 5ஆம் தேதியன்று, டிரம்ப் இரான் மீது “அதிகபட்ச அழுத்தத்தை” தரும் ஓர் உத்தரவில் கையெழுத்திட்டார்.அதைத் தொடர்ந்து, “நான் ஓர் ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள விரும்புகிறேன். இதில் அனைவரும் உடன்படுவார்களா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், ராணுவ பலத்தின் மூலம் கிடைக்கும் வெற்றிக்கு நிகரான வெற்றியாக இந்த ஒப்பந்தம் இருக்கும்,” என்று ஃபாக்ஸ் நியூஸிடம் அதிபர் டிரம்ப் கூறினார்.
