முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை முன்வைத்து குமுளியில் கேரளா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதற்கு பதிலடியாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கோரி குமுளி தமிழக எல்லையில் தமிழ்நாட்டு விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தினர். இதனால் தமிழ்நாடு- கேரளா மாநிலங்கள் எல்லையான குமுளியில் பதற்றம் ஏற்பட்டது.முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை முன்வைத்து கேரளா நீண்டகாலமாக அரசியல் செய்து வருகிறது.
�
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாகவே இருக்கிறது என உச்சநீதிமன்றம் பலமுறை தெரிவித்துவிட்டது; பல்வேறு வல்லுநர்கள் குழுவும் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாகவே இருக்கிறது என திட்டவட்டமான அறிக்கைகளைக் கொடுத்துவிட்டன.அண்மையில் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என கேரளாவைச் சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை டிஸ்மிஸ் செய்த உச்சநீதிமன்றம், எத்தனை பருவமழைகளை எதிர்கொண்டு தாங்கி நிற்கிறது முல்லைப் பெரியாறு அணை; முல்லைப் பெரியாறு அணையை இவ்வளவு வலுவாக கட்டியவர்களை நாம் பாராட்ட வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க
�
வலியுறுத்தி கேரளாவைச் சேர்ந்த அமைப்பு ஒன்று குமுளியில் போராட்டம் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமுளியைப் பொறுத்தவரையில் இரு மாநில சோதனைச் சாவடிகளும் அருகே அமைந்துள்ளன. 2011-ம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை வெடித்த போது குமுளியில் இரு மாநில அரசுகளுமே போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது. தமிழக விவசாயிகள், லோயர்கேம்ப் பகுதியிலும் கேரளாவை சேர்ந்தவர்கள் வண்டி பெரியாரிலும் மட்டுமே போராட்டம் நடத்த
�
அனுமதிக்கப்பட்டனர்.ஆனால் இந்த நடைமுறையை மீறி திடீரென குமுளியில் கேரளா அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் தமிழக விவசாயிகள் கொந்தளித்தனர். கேரளா அமைப்பினருக்கு பதிலடி தரும் வகையில் தமிழ்நாட்டு விவசாயிகள் நேற்று லோயர்கேம்ப்பில் இருந்து குமுளியை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். ஆனால் போலீசார் தமிழ்நாட்டு விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் தமிழ்நாடு- கேரளா எல்லையான குமுளியில் பதற்றம் ஏற்பட்டது.
