திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர் குருராஜ் மூளைச்சாவு அடைந்துள்ளார். இதன் காரணமாக தனியார் விபத்து பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ள நிலையில், மூளைச்சாவு அடைந்த மாணவரின் உடல் பாகங்களான இதயம், கண், கல்லீரல், நுரையீரல் உள்ளிட்டவை தானமாக அளிக்க குடும்பத்தினர் ஒப்புதல் அளித்துள்ளனர்.திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு நோக்கி 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார்
பேருந்து நேற்று முன் தினம் சென்றது. அப்போது ஊத்துக்குளி அடுத்த செங்கப்பள்ளி அடுத்த பல்லகவுண்டம்பாளையம், சாம்ராஜ்பாளையம் பிரிவு பகுதியில் சென்ற போது, கண்டெய்னர் முன்னால் சென்று கொண்டிருந்தது.அந்த கண்டெய்னர் லாரியை முந்தி செல்ல தனியார் பேருந்து ஓட்டுநர் முயற்சித்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து, தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஈரோடு தனியார் கல்லூரியில் படித்து வந்த இளைஞர்களான பெரியசாமி
மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் 20க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து அலறினர். இதனால் அந்த பகுதியே பரபரப்பாகியது. இதன்பின் சம்பவம் அறிந்து உடனடியாக அங்கு சென்ற போலீசார் மற்றும் சக மக்கள் இணைந்து காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் ஒருவரின் கை, கால் துண்டானது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்திற்கான
காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தனியார் பேருந்து விபத்தில் சிக்கி காயமடைந்த கல்லூரி மாணவர் மூளைச்சாவு அடைந்துள்ளார். ஊத்துக்குளி அருகேயுள்ள ஊமச்சி வலசு கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து – அனிதா தம்பதி மகன் குருராஜ்.18 வயதாகும் இவர், பெருந்துறை கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் படுகாயமடைந்து கோவை தனியார் மருத்துவமனையில்
சிகிச்சை பெற்றுவந்த குருராஜ், மூளைச்சாவு அடைந்திருக்கிறார். இதையடுத்து, பஸ் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. மூளைச்சாவு அடைந்த குருராஜின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதயம், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், கண் உள்ளிட்ட உறுப்புகளை தானம் அளிக்க குடும்பத்தினர் ஒப்புதல் அளித்தனர். பெற்ற மகனை இழந்த துயரமான சூழலிலும், உடல் உறுப்புகளை தானம் அளிக்க முன்வந்த குருராஜின் பெற்றோர் மாரிமுத்து அனிதாவின் செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
