விசேட உபகுழுவை அமைக்குமாறு பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அறிவுறுத்தல்

4cddd5e3711793b14ffafe620381a89b_L.jpg

அரசாங்க சேவையில் தேவையான கொள்கை மாற்றத்தை அடையாளம் காண்பதற்காகப் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் எட்டுப் பேரைக் கொண்ட விசேட உபகுழுவை அமைக்குமாறு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவர் கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அறிவுறுத்தல் வழங்கினார்.

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (05) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த உபகுழு அமைக்கப்பட்டது.

கௌரவ பிரதியமைச்சர் பி.ருவன் செனரத் அவர்களின் தலைமையில் இந்த உபகுழு அமைக்கப்பட்டிருப்பதுடன், இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன சூரியாராச்சி, அஜந்த கம்மெத்தெகே, தர்மப்பிரிய திசாநாயக்க, தினிந்து சமன், (சட்டத்தரணி) கீதா ஹேரத், மொஹமட் பைசல் மற்றும் லால் பிரேமநாத் ஆகியோர் இதில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த உபகுழுவின் ஊடாக அரசாங்க சேவைக்கான நியமனங்கள், போட்டிப் பரீட்சைகளை நடத்துதல், ஓய்வூ வழங்குதல் மற்றும் வெற்றிடங்கள் உள்ளிட்ட அரசாங்க சேவையிலுள்ள பிரிவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொள்கைரீதியான மாற்றங்கள் குறித்துத் தேவையான விசாரணைகளை நடத்தி, அடையாளம் காணப்பட்ட முன்மொழிவுகள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இவ்வாறான உபகுழுவொன்றை அமைக்க வேண்டியதன் அவசியத்தை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாராச்சி முன்மொழிந்ததுடன், இதற்கு அமையவே குழுவின் தலைவர் இந்த உபகுழுவை நியமித்தார்.

அத்துடன், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

2024 ஆம் ஆண்டில் உள்ளூராட்சி மன்றங்களில் 8,435 பேரின் சேவைகள் உறுதிப்படுத்தப்பட்டதாக இங்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் தற்பொழுத பணியாளர் மதிப்பாய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், அதன்படி, இறுதி அறிக்கை 2025 மார்ச் 31ஆம் திகதி கிடைக்கப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் நியமனங்களுக்குத் தேவையான தரவுகளை முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு சில திட்டங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களின் சேவைகள் உறுதிப்படுத்தப்படாது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

கிராம சேவர்களின் நியமனத்திற்கான போட்டிப் பரீட்சை குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் குழுக் கூட்டத்தில், குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *