அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராகவும் அவரது அரசில் முக்கிய பதவி வகிக்கும் தொழிலதிபர் எலான் மஸ்க்குக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்துள்ளது.அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப் வெளிநாடுகள் மீதான நடவடிக்கைகள் தவிர உள்நாட்டிலும் அதிரடியான சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். பிராஜக்ட் 2025 என்ற தலைப்பில் கருத்தடை மருந்துகளில் இருந்து கல்வித்துறை வரை நிதித்துறையிலிருந்து நீதித்துறை வரை இவர் அறிவித்துள்ள ஏராளமான நடவடிக்கைகள் அமெரிக்காவில் கடும் விமர்சனங்களும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளது.
இந்நிலையில், வெளிநாடுகள் மீது ட்ரம்ப் தொடங்கியுள்ள வணிகப்போர் உள்நாட்டில் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது. ட்ரம்ப்பையும் அவரது அரசில் செயல் திறன் மேம்பாட்டு துறையின் தலைவராக இருக்கும் தொழிலதிபர் எலான் மஸ்க்கையும் எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன.ட்ரம்ப்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், எலான் மஸ்க்கை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
குறிப்பாக தொழிலதிபரான எலான் மஸ்க்கிற்கு அதிக அதிகாரம் அளித்து விருப்பம் போல் செயல்பட அனுமதித்துள்ளது குறித்தும் போராட்டக்காரர்கள் குரல் எழுப்பினர்.
லாஸ் ஏஞ்சலிஸ், மின்னசோட்டா என 50 மாநிலங்களின் தலைநகரங்களில் ஒரே நாளில் நடைபெற்ற இப்போராட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ட்ரம்ப்பின் இரு பாலின கொள்கையை எதிர்த்து LGBTQ+ சமூகத்தை சேர்ந்தவர்கள் அலபாமாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
