அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 104 இந்தியர்கள், அந்நாட்டு ராணுவ விமானத்தில் பஞ்சாபின் அமிர்தசரசுக்கு நேற்று திருப்பி அனுப்பப்பட்டனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக 7.25 லட்சம் இந்தியர்கள் உள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டால், நம் நாட்டில் மிகப்பெரிய சமூக மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களில், வட அமெரிக்க நாடான மெக்சிகோவைச்
சேர்ந்தவர்கள் முதலிடத்தில் உள்ளனர். இரண்டாவது இடத்தில் மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோரும், மூன்றாம் இடத்தில் இந்தியாவும் உள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது.அமெரிக்காவில் குறைந்தபட்சம் 7.25 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக, வாஷிங்டன் டி.சி.,யை தலைமையிடமாக வைத்து செயல்படும் ‘பியூ’ எனப்படும் சிந்தனைக் குழாம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதில் முதல்கட்டமாக 18,000 பேர் அடங்கிய பட்டியலை உறுதி செய்துள்ள அமெரிக்கா, அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவைச் சேர்ந்த 205 பேர் முதற்கட்டமாக, நம் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக அமெரிக்க அரசு அறிவித்தது. அந்நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான சி – 17 விமானம் வாயிலாக அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
திட்டமிட்டபடி, பிப்., 4ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு டெக்சாஸ் மாகாணத்தின் சான் அன்டோனியோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானம், நேற்று காலை இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காலதாமதமாக நேற்று மதியம் 1:55
மணிக்கு, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ்ஜி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது.
மொத்தம் 205 பேர் திருப்பி அனுப்பப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 104 பேர் மட்டுமே முதற்கட்டமாக வந்தடைந்தனர்.
இதில், 30 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். ஹரியானா மற்றும் குஜராத் மாநிலங்களில் இருந்து சென்ற தலா 33 பேரும் இதில் அடங்குவர்
