தாய்லாந்து, பாங்காக்கில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 7 கோடி ரூபாய் மதிப்பிலான உயர்ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சாவை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவில் சமீபகாலமாக போதைப் பொருள் விற்பனை
தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கல்லூரி மாணவர்கள், ஐடி இளைஞர்களை குறிவைக்கும் போதைப் பொருள் கும்பல் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒரு நெட்வொர்க்கை வைத்து போதைப் பொருள் விற்பனையை செய்து வருகின்றனர். போதைப் பொருளுக்கு அடிமையாகும் இளைஞர்கள் சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.வெளிநாடுகளில் இருந்து மெத்தபெட்டமைன், கஞ்சா, கஞ்சா சாக்லேட், கஞ்சா ஆயில், போதை ஊசிகள் போன்ற போதைப் பொருள்களுக்கு அடிமையாகி வருகின்றனர். இந்நிலையில், தாய்லாந்து, பாங்காக்கில் இருந்து விமானம் மூலம் கடத்தி
வரப்பட்ட 7 கோடி ரூபாய் மதிப்பிலான உயர் ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சாவை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் இருந்து சென்னைக்கு தனியார் பயணிகள் விமானம் வந்துள்ளது. அந்த விமானத்தில் பயணிகள் வெளியேறியதை
அதிகாரிகள் கண்காணித்து வந்துள்ளனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞரின் உடைமைகளை சுங்கத் துறை மோப்ப நாய் மோப்பம் பிடித்துள்ளது. அந்த இளைஞரின் உடைமையில் இருந்த போதைப் பொருளைக் காட்டிக் கொடுத்தது. மேலும், தரையில் அமர்ந்து கால் நகங்களால் தரையை கீறி அதிகாரிகளுக்கு சைகை காட்டியுள்ளது.மோப்ப நாயின் சைகையை அறிந்த அதிகாரிகள் உடனடியாக அந்த இளைஞரின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில் இருந்த 3 பார்சல்களில் பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா கடத்தி வந்திருப்பது
தெரியவந்துள்ளது. இதையடுத்து, சுங்க அதிகாரிகள் உடனடியாக அந்த கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். அந்த 3 பார்சல்களில் 6.9 கிலோ உயர் ரக கஞ்சா இருந்துள்ளது. இந்த கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூ. 7 கோடி என சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், கடந்த இருநாட்களுக்கு முன் கஞ்சா கடத்தல் செய்வதற்காக பாங்காக் சென்றுவிட்டு இந்த விமானத்தில் திரும்பி வந்துள்ளார். இவரை
கஞ்சா கடத்துவதற்காக பாங்காங்கிற்கு அனுப்பி வைத்த நபர் சென்னை விமான நிலையத்திற்கு வந்து கஞ்சாவை வாங்கிவிட்டு கடத்தலுக்கான பணத்தைக் கொடுப்பதாக கூறியுள்ளார். ஆனால், பயணி சுங்கத் துறையிடம் சிக்கியவுடன் கடத்தலுக்கு அனுப்பிவைத்த நபர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். அந்த நபரை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.பாங்காக்கில் இருந்து ரூ. 7 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா போதைப் பொருள் கடத்தி வரப்பட்டுள்ள சம்பவம், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
