அமெரிக்காவில் அத்துமீறி குடியேறிய இந்தியர்கள் பலர் மீண்டும் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர். இந்தியர்களை இந்தியாவை நோக்கி நாடு கடத்த தொடங்கி உள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
சட்டவிரோத இந்தியர்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்க ராணுவ விமானம் நேற்று அதிகாலை சான் அன்டோனியோவிலிருந்து பஞ்சாபின் அமிர்தசரஸ் நோக்கி புறப்பட்டது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்கா வந்து குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.அதன் ஒரு கட்டமாக அமெரிக்க ராணுவ விமானம், அமெரிக்காவில் உள்ள 11 மில்லியன் ஆவணமற்ற குடியேறிகளை வெளியேற்ற தொடங்கி உள்ளது. அதன்படி டெக்சாஸின் சான் அன்டோனியோவில் இருந்து 140+
இந்தியர்களை ஏற்றிக்கொண்டு C-17 விமானம் நேற்று அதிகாலை 3 மணியளவில் புறப்பட்டது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நோக்கி இந்த விமானம் வந்த நிலையில் சற்று முன் தரையிறங்கியது. இந்த நாடு கடத்தலானது இறுதி கிடையாது.. திட்டமிடப்பட்ட பல நாடு கடத்தல் பிளான்களில் இதுவும் ஒன்று. வரும் நாட்களில் இன்னும் பல இந்தியர்கள் நாடு கடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.அவமானம்: இந்த விவகாரத்தில் இந்தியர்கள் மிக மோசமாக
அவமானப்படுத்தப்பட்டு உள்ளனர். ராணுவ விமானத்தில் இந்தியர்களின் கை, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு உள்ளது. இப்படி கை, கால்களை கட்டிய பின்பே 48 மணி நேரம் அவர்கள் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.அவர்கள் நாடுகடத்தப்படும் குற்றவாளிகள் என்பதால் இப்படி மோசமாக நடத்தப்படுகிறார்கள். இந்தியர்களுக்கு இத்தனை ஆண்டு வரலாற்றில் அமெரிக்காவால் இவ்வளவு மோசமான அவமானம் நேர்ந்ததே இல்லை. அப்படி ஒரு அவமானம் இன்று நேர்ந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. யாரெல்லாம் அனுப்பப்படுகிறார்கள்: டிரம்ப்
நிர்வாகம் ஆவணமற்ற அல்லது சட்டவிரோதமாக குடியேறியவர்களை மட்டுமே குறிவைக்கிறது. முதல் கட்டமாக முந்தைய ஜோ பிடன் நிர்வாகத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அடுத்தது புதிய கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்கள் வெளியேற்றப்படுவார்கள். இதற்காக போர் விமானம், பயணிகள் விமானம் இரண்டும் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.அடுத்த சில நாட்களில் டெக்சாஸின் எல் பாசோ மற்றும் கலிபோர்னியாவின்
சான் டியாகோவிலிருந்து 5,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் நாடு கடத்தப்படுவார்கள் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. இதுவரை, ராணுவ விமானங்கள் மூலம் குவாட்டமாலா, பெரு மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளுக்கு மக்கள் நாடு கடத்தப்பட்டனர். இப்போது இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.எத்தனை இந்தியர்கள் வெளியேற்றப்படுவார்கள்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 20,407 இந்தியர்களை அமெரிக்கா அடையாளம்
கண்டுள்ளது. குறைந்தபட்சம் 20,407 ஆவணமற்ற இந்தியர்கள் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படலாம். இவர்களில், 17,940 பேர் முறையான ஆவணங்களற்ற நபர்கள் என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) தெரிவித்துள்ளது. 2,467 பேர் தற்போது அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்தின் (ICE) பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த புள்ளிவிவரங்கள் கடைசியாக 2022 இல் புதுப்பிக்கப்பட்டன. அடுத்த சில மாதங்களில் இது மீண்டும் புதுப்பிக்கப்படலாம் என்பதால்.. இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் உயரலாம்.
