20 லட்சம் அரசு ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்.
அமெரிக்காவில் அரசு ஊழியர்களை குறைக்கும் திட்டத்தில் அதிபர் ட்ரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.இது தொடர்பாக சுமார் 20 லட்சம் அரசு ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. பதவியிலிருந்து தாமாகவே முன்வந்து விலகும் ஊழியர்களுக்கு 8 மாத ஊதியம் அளிக்கப்படும் என மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து
முடிவெடுக்க பிப்ரவரி 6ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஊழியர்களின் பணித்திறன் அடிப்படையில் அவர்களை தொடர்ந்து வைத்துக்கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.அதே நேரம் ஒரே நேரத்தில் அதிகளவு பணியாளர்கள் வெளியேறும் பட்சத்தில் அரசு நிர்வாகம் பாதிக்கப்படும் என்றும் எச்சரிக்கைகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க அரசின் நிர்வாகத்திறனை மேம்படுத்தும் வகையில் DEPARTMENT OF GOVERNMENT EFFICIENCY என்ற பெயரில் பிரத்யேக துறை ஒன்றை ட்ரம்ப் ஏற்படுத்தியுள்ளார்.
இதற்கு பொறுப்பு அமைச்சராக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் கடந்த நவம்பர் நிலவரப்படி 30 லட்சம் அரசு ஊழியர்கள் இருந்தனர். இது அந்நாட்டில் ஒட்டுமொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 1.9% ஆகும்.
