பாகிஸ்தான் மட்டுமல்ல சீனாவுக்கே அழுத்தம் கொடுக்கலாம்” – விக்ராந்துக்கு துணையாக வருகிறது ரஃபேல்-எம் இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் பிரான்சும் திங்கள்கிழமையன்று கையெழுத்திட்டன.
இந்த விமானங்களின் மொத்த விலை சுமார் ரூ.64,000 கோடியாக இருக்கும் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விமானங்களை இந்தியா பிரெஞ்சு பாதுகாப்பு நிறுவனமான டசால்ட் ஏவியேஷனிடமிருந்து வாங்குகிறது.
இந்த ரஃபேல் விமானங்களை ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலில் நிறுத்தி பயன்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.இந்தியாவிற்கும் , பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் எட்டப்பட்ட இந்த ஒப்பந்தம் பல வழிகளில் முக்கியமானது.
இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான 26 ரஃபேல்-எம் (கடல்) ஒப்பந்தம் குறித்த தகவல்களை பிஐபி வழங்கியுள்ளது.
பிஐபி தகவலின் படி, இந்த 26 போர் விமானங்களில், 22 ஒற்றை இருக்கை கொண்டதாகவும், நான்கு இரட்டை இருக்கை கொண்டதாகவும் இருக்கும்.
இந்த விமானங்களின் விநியோகமும் 2030 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும்.
இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவில் ரஃபேல் விமானங்களின் உதிரிபாகங்களை உற்பத்தி செய்வதற்கான வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் விமானங்களைப் பராமரித்தல் போன்ற பல விஷயங்களும் அடங்கும்.
இது அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று அரசு நம்புகிறது.இந்திய விமானப்படையிடம் ஏற்கனவே 36 ரஃபேல் போர் விமானங்கள் உள்ளன, இப்போது ரஃபேல்-எம் விமானத்தை வாங்குவதற்கு ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
இது விமானம் தாங்கி கப்பல்களின் உதவியுடன் கடலில் இயங்கக்கூடிய விமானம் ஆகும்.
“இன்றைய காலகட்டத்தில், உலகின் பல நாடுகளும் ட்ரோன்களின் உதவியுடன் தாக்குகின்றன.
ஆனால் துல்லியமாக குறி வைத்து, நீண்ட தூரத்தைத் தாக்கும் திறனின் அடிப்படையில், போர் விமானங்கள் முக்கியமானவை” என்று பாதுகாப்பு நிபுணர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.
“ரஃபேல் ஒரு நவீன போர் விமானம், பிரான்ஸ் ஏற்கனவே அதன் திறனை நிரூபித்துள்ளது. இதன் மூலம், பாகிஸ்தானுக்கு எதிராக மட்டுமல்ல, சீனாவுக்கு எதிராகவும் இந்தியா தனது பலத்தைக் காட்ட முடியும்” என்கிறார் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா.
எந்தவொரு போர் விமானமும் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பது அதன் சென்சார் திறன் மற்றும் ஆயுதங்களைப் பொறுத்தது.
அதாவது, ஒரு போர் விமானத்தால் எவ்வளவு தூரத்தில் உள்ள எதிரியை கண்டறிய முடிகிறது, எவ்வளவு துல்லியமாக, எவ்வளவு தூரத்தில் இருந்து தாக்க முடிகிறது என்பதே போர் விமானத்தின் சக்தியைக் குறிக்கிறது.
இந்தியா முன்னதாக 1997-98 ஆம் ஆண்டில் ரஷ்யாவிடமிருந்து சுகோய் விமானங்களை வாங்கியது.
சுகோய்க்குப் பிறகு, போர் விமானங்களின் தொழில்நுட்பம் மாறிவிட்டது, அந்த அடிப்படையில், ரஃபேல் மிகவும் நவீன போர் விமானமாக உள்ளது.
ஆசியா டைம்ஸின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆய்வாளரான இம்மானுவேல் ஸ்கெமியா, தேசிய ஆர்வம் எனும் இதழில்,
“அணு ஆயுதம் ஏந்திய ரஃபேல் விமானத்தால் 150 கிலோமீட்டர் வரை வானிலிருந்து ஏவுகணைகளை ஏவ முடியும் மற்றும் 300 கிலோமீட்டர் வரை வானிலிருந்து தரைக்கு செல்லும் வரம்பைக் கொண்டுள்ளது. சில இந்திய ஆய்வாளர்கள் ரஃபேல் பாகிஸ்தானின் எப் -16 ஐ விட அதிக திறன் கொண்டது என்று நம்புகிறார்கள்” என குறிப்பிட்டார்,
