ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதல் காரணமாக, சௌதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு பிரதமர் மோதி அவசரஅவசரமாக டெல்லி திரும்பியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதல் தொடர்பாக அதிகாரிகளுடன் அவர் உடனடியாக முக்கிய ஆலோசனை நடத்தினார் என்று ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்ரல் 22) தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயுததாரிகள் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளதாக, உள்ளூர் காவல்துறை அதிகாரிகளின் தகவலை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர். மருத்துவக் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்தது.
இந்த தீவிரவாத தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில், டாக்டர் பரமேஸ்வரம் மற்றும் 83 வயது சந்துரு ஆகியோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனந்த்நாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர சம்பவ இடத்திலிருந்த 57 வயது பாலச்சந்திராவுக்கு மன அழுத்தம் காரணமாக நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.உயிரிழப்புகள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றும் காயமடைந்தவர்களில் சிலர் அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பிபிசி செய்தியாளர் மாஜித் ஜஹாங்கீர் ஜம்மு காஷ்மீரில் இருந்து தெரிவித்தார்.
திடீர் துப்பாக்கிச் சூடு காரணமாக, குழப்பம் ஏற்பட்டதாகவும், அனைவரும் அழுது கூச்சலிட்டபடி அங்கும் இங்கும் ஓடத் தொடங்கினர் என்று குஜராத்தைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப் பயணி பிபிசியிடம் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷுபம் திவேதி, இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர். சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட இவர், தனது மனைவியுடன் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய ஷுபம் திவேதியின் உறவினர் சௌரப் திவேதி, “ஷுபமுக்கு, இந்த ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதிதான் திருமணம் நடந்தது. அவர் தனது மனைவியுடன் பஹல்காமில் இருந்தார். சம்பவத்திற்கு பிறகு, அவரது மனைவி என் மாமாவை தொலைபேசியில் அழைத்து ஷுபம் தலையில் சுடப்பட்டதாகக் கூறினார். தனிநபர்களின் பெயர்களைக் கேட்ட பிறகு துப்பாக்கிச் சூடு தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. அனைத்து நடைமுறைகளும் முடிந்து 2-3 நாட்களுக்குப் பிறகு ஷுபமின் உடல் விடுவிக்கப்படும் என்ற தகவல் எங்களுக்குக் கிடைத்துள்ளது” என்று கூறினார்.ஆண்களை குறிவைத்து தாக்குதல்’
‘ஆயுததாரிகள் பெண்களை விட்டுவிட்டு ஆண்களை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது’ என்று தாக்குதலை நேரில் கண்டவர்கள் உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
“தீவிரவாதிகள் எத்தனை பேர் என்று என்னால் சொல்ல முடியவில்லை, ஒரு ஒரு சிறிய புல்வெளிக்கு அருகில் உள்ள காட்டில் இருந்து வெளியே வந்து துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர்,” என்று ஒரு பெண் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் கூறினார்.
அவர்கள் தெளிவாக பெண்களை விட்டுவிட்டு, ஆண்களை மட்டுமே குறிவைத்துச் சுட்டனர். சில ஆண்களை ஒரே தோட்டா மூலமும், சில ஆண்களை பல தோட்டாக்கள் மூலமும் கொன்றனர். அந்த இடமே ஒரு புயல் வீசியது போல இருந்தது, என்று அவர் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் கூறினார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்காக பேசியுள்ள பல்லவி ராவ் என்ற மற்றொரு பெண் (சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் அவரது கணவரும் ஒருவர்) ‘ஆண்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகக்’ கூறினார்.இந்திய பிரதமர் மோதி அவசர ஆலோசனை
பிரதமர் மோதி 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று (ஏப்ரல் 22) சௌதி அரேபியா சென்றிருந்தார். இன்றிரவு (ஏப்ரல் 23) அவர் டெல்லி திரும்புவதாக இருந்தது. ஆனால் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக தனது சௌதி பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு, இன்று காலை டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோதி.
அதன் பின்னர், ஜம்மு காஷ்மீர் தாக்குதல் தொடர்பான விவரங்களை அதிகாரிகளிடம் பிரதமர் மோதி கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
