பிள்ளையானின் பல குற்றச்சாட்டுக்கள் வெளிச்சத்திற்கு வருகிறது பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனிடம் அவருக்கு எதிரான மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டில் மாத்திரம் பிள்ளையானுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. தற்போது அவர் மீதான மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பான சாட்சியங்கள் கிடைத்துவருகின்ற நிலையில் அது குறித்தும் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
அது தொடர்பான முன்னேற்றம் எதிர்வரும் காலங்களில் காவல்துறையினால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிள்ளையானிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் பல சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாவதுடன், அவற்றில் சில சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாகும்.
சில குற்றச்சாட்டுகள் உயர்நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட வழக்குகளுடன் தொடர்புடையவையாகும். அவை தொடர்பில் விசாரிக்கப்படுகிறது. அதன்பிரகாரம் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சில கொலை வழக்குகளில் அவர்கள் எந்தவிதத்தில் தொடர்பை கொண்டிருந்தார்கள் என காவல்துறை விசாரித்துவருகிறது. இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை என்பது மிகவும் உணர்திறன் மிக்க விடயமாகும்.
அதில் கர்தினால் உள்ளிட்ட பல தரப்பினர் திருப்தியடையும் வகையில் பெறுபேறுகள் கிடைத்துவருகின்றன என கூறமுடியும். பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்தும் பொறுப்பு நீதிமன்றத்துக்கும், குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கும் பாரப்படுத்தப்பட்டுள்ளது.நிச்சயமாக விசாரணைகள் முறையாக இடம்பெறுகின்றன என்ற உத்தரவாதத்தை வழங்க முடியும். எனவே, பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துவதற்குச் சரியான திகதியைக் கூற முடியாது.
பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்த வேண்டும் என பலர் குழப்பமடைந்தாலும், அரசாங்கத்துக்குக் குழப்பமடைய வேண்டிய தேவை இல்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து பிள்ளையானிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட அமைச்சரவை பேச்சாளர், பிள்ளையானை சந்தித்து வந்ததன் பின்னர் ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து அவர் எதுவும் கூறவில்லை என உதய கம்மன்பில கூறியிருந்தார். எவ்வாறாயினும் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்படும் போது இந்த வலையமைப்பு மற்றும் அதன் விசாலம் குறித்து அறிந்து கொள்ளமுடியும்.ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்பாலான திகதிகளில் இடம்பெற்ற பல கொலைகள் மற்றும் கப்பம் கோரல்கள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சிறையிலிருந்த பிள்ளையான் இதில் தொடர்புபடவில்லை என மறுக்க முடியாது. கடந்த காலங்களில் பலர் சிறையிலிருந்து குற்றங்களை வழிநடத்திய வரலாறுகள் உள்ளன. எனவே, பிள்ளையான் இதன் பின்னணியில் உள்ளாரா? என்பது குறித்து விசாரணைகளில் தெரியவரும் எனவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
