நீரில் மூழ்கி இளைஞர் பலி – வவுனியாவில் சோகம் – வைத்தியசாலைக்கு விரைந்த எம்.பி வவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கியதில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (14) மாலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, சிதம்பரபுரத்தில் தற்காலிகமாக வசித்து வந்த இளைஞர் ஒருவர் தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு தனது உறவினர்களுடன் வருகை தந்திருந்த நிலையில் குறித்த இளைஞர் நீச்சல் குளத்தில் இறங்கி குளித்துள்ளார்.
இதன்போது, அவர் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவத்தில் கண்டி, நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.
நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர் வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து வர்த்தக நிலையம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
