அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கு பதிலடி தந்த சீனா மீது, அதிபர் டிரம்ப் கூடுதலாக 50 சதவீத வரி விதிப்பை நேற்று அமல்படுத்தினார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிப்பு முறையை கொண்டு வந்தார். இதன்படி சீனப் பொருட்களுக்கான வரி 54 சதவீதமாக உயர்ந்தது.
இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு சீனா 34 சதவீதம் வரி விதித்தது. இந்த வரி போர் காரணமாக உலகளவில் பங்குச்சந்தைகள் கடந்த சில நாட்களாக கடும் சரிவை சந்தித்து வருகின்றன.
இந்நிலையில், சீனா விதித்துள்ள 34 சதவீத வரியை நீக்கவில்லை என்றால், சீன இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்காவில் கூடுதலாக 50 சதவீத வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் எச்சரித்தார்.
ஆனால் சீனா, ‘இந்த எதிர் நடவடிக்கை, சர்வதேச வர்த்தக ஒழுங்கைப் பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டது. இது சட்டப்பூர்வமானது’ எனக் கூறி மறுத்துவிட்டது.
இதையடுத்து சீனப் பொருட்கள் அனைத்துக்கும் கூடுதல் 50 சதவீத வரி விதிக்கும் உத்தரவை டிரம்ப் பிறப்பித்தார். இது, நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனால், சீனப் பொருட்கள் மீதான வரி அமெரிக்காவில் 104 சதவீதமாக உயர்ந்துள்ளது.
