இத்தருணத்தில் உலகம் ஏற்றுக்கொள்ளும் ஒழங்கில், ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் நாட்டின் வளர்ச்சிப் பயணத்திற்கு சிறந்த மற்றும் வலுவான அடித்தளமாக அமைந்திருக்க வேண்டும்.
கம்யூனிச சீனா, வியட்நாம் மற்றும் முதலாளித்துவ நாடுகள் மற்றும் சோசலிச நாடுகள் என சகல நாடுகளும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளன. ரணசிங்க பிரேமதாச அவர்கள் 200 ஆடைத் தொழிற்சாலைகள் திட்டத்தை அன்று ஆரம்பித்து வைத்தார்.
அன்றைய காலத்தில் இந்த வேலைத்திட்டத்தை அவமதித்தவர்கள் இருந்த போதும், இன்று நாட்டின் ஏற்றுமதி துறையில் முன்னணியில் உள்ள துறைகளில் ஒன்றாக இது மாறியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் சாதனைகளை படைத்து டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். America First என்பதே அவரது தேர்தல் கோஷமாக காணப்பட்டது.
அந்தக் கொள்கையின்படி, பல தசாப்தங்களாக அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டதனால், அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதித்த நாடுகள் மீது பரஸ்பர வரியை விதித்து பதிலடியை கொடுத்துள்ளார். இதன் காரணமாக நமது நாட்டின் மீதும் 44% வரி விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, சர்வதேச வர்த்தகம் தொடர்பில் விசேட நிபுணத்துவ அறிவு கொண்ட ஒரு குழுவை வாஷிங்டனுக்கு அனுப்பி, அமெரிக்காவின் உயர்மட்ட தரப்புகளோடு உறவுகளை ஏற்படுத்தி, எமது நாட்டிற்கு தீர்வுகளை முன்வைப்பதே பொருத்தமானது என தற்போதைய அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பல முறை கூறியும் கூட அரசாங்கம் அந்த ஆலோசனைகளை புறக்கணித்து ஆணவமான பதில்களை வழங்கியது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அண்மையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உலக நாடுகள் மீதான வரிகளை அறிவித்தார். நாம் அமெரிக்கப் பொருட்களுக்கு 88% வரி விதித்ததால் எம்மீது 44% வரி விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு நிலை ஏற்படும் என அரசாங்கம் அறிந்திருந்தும், அது தொடர்பில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எச்சரித்து யோசனைகளை முன்வைத்த போதும் அவற்றுக்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இலங்கை நாட்டின் ஏற்றுமதி துறையில் ஈடுபட்டுள்ள அனைவரும் இன்று கலக்கமடைந்து போயுள்ளனர். ஆடைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தை சந்தித்தபோது, அவர்களும் இதனால் வருத்தமடைந்துள்ளனர் என்பது தெளிவாக தெரிந்தது.
ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் இந்த வரிக் கொள்கை அமுல்படுத்தப்படும். இந்த வரி விதிப்பு குறித்து உலக நாடுகள் அமெரிக்காவோடு பேசி வருகின்றன. நமது நாடு இதுவரையில் எந்த நடவடிக்கையையும் எடுத்த பாடில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிமித்தம் கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதி அமைப்பாளர் அனுராத விமலரத்ன அவர்களால் நேற்று (05) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.ஒரு மில்லியனுக்கும் அதிகமானோரில் வேலைகள் ஆபத்தில்!
நமது நாட்டில் உற்பபத்தி செய்யப்படும் ஆடைகளில் 40% ஆனவை அமெரிக்காவிற்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 350,000 நேரடி வேலைகளையும் 1 மில்லியன் மறைமுக வேலைகளையும் இது உருவாக்கித் தருகின்றன. இன்று அவர்களது தொழில்கள் ஆபத்தில் காணப்படுகின்றன. இந்த தொழில்துறையினர் மற்றும் தொழிலாளர்கள் நிர்க்கதிகளுக்கு ஆளாகியுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
அரசிடம் இன்னும் சரியான திட்டம் இல்லை.
அரசிடம் இது குறித்து இன்னும் சரியான திட்டமொன்று இல்லை. இந்த வரிகள் விதிக்கப்படக்கூடாது என்று நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
இந்த வரிகளால் ஆடைத் தொழில் சரிந்தால் பொருளாதார சுனாமி ஏற்படும். ஐக்கிய மக்கள் சக்தியைச் சந்திக்க வரும் இராஜதந்திரப் பிரதிநிதிகளிடம் நாட்டுக்கு பக்க பலத்தைக் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.நான் நாட்டையும் மக்களையும் தான் மதிக்கிறேன். துன்பப்படும் மக்களின் துன்பத்தை மூலதனமாக்கி ஆட்சியைப் பிடிக்கும் கபட அரசியலில் நான் ஈடுபடவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எமக்கு உதவுமாறு பிரதமர் மோடியிடமும் கேட்டுக் கொண்டேன்.
நரேந்திர மோடியைச் சந்தித்தபோதும், நமது நாட்டு உற்ப்பத்திப் பொருட்களுக்கு இந்தியச் சந்தை வாய்ப்பை மேலும் விரிவுபடுத்தித் தருமாறு வேண்டுகோள் விடுத்தேன்.
வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டு மக்கள் மீண்டு வருவதற்கான எமது முயற்சிகளுக்கு பக்க பலத்தை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டேன்.
வங்குரோத்தான நேரத்திலும், இந்தியா எங்களுக்கு அதிக ஆதரவை வழங்கியது. எதிர்காலத்திலும் இந்தியாவின் இவ்வாறான ஆதரவு எமக்குத் தேவை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
