ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் ரயில் பாலம் ரூ.550 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை, பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். முன்னதாக, பாலம் கட்டுமான பணி காரணமாக ராமேஸ்வரம் செல்ல வேண்டிய ரெயில்கள் மண்டபம் வரையில் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று பாம்பன் ரயில் பாலம் திறக்கப்பட உள்ளதால், மீண்டும் ரயில்கள் ராமேஸ்வரம் வரையில் இயக்கப்பட உள்ளன. அந்த வகையில் 26 ரயில் சேவைகள் மீண்டும் ராமேஸ்வரம் வரை இயக்கப்பட உள்ளன.
ராமநவமி நாளான ஏப்ரல் 06 அன்று பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதுடன், ராமேஸ்வரம் முதல் தாம்பரம் வரையிலான பாம்பன் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்ட புதிய தினசரி ரயில் சேவையையும் தொடங்கி வைக்க உள்ளார். புதிய பாம்பன் எக்ஸ்பிரஸ் தினசரி பிற்பகல் 03.35 மணிக்கு ராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக அதிகாலை 03.10 மணியளவில் தாம்பரம் சென்றடையும்.
மறு மார்க்கமா ரயில் எண் 104 தினசரி மாலை 06.05 மணியளவில் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைபூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக அதிகாலை 05.45 மணியளவில் ராமேஸ்வரம் வந்தடையும். இந்த ரயில் தவிர ஏற்கனவே ராமேஸ்வரம் வரை இயக்கப்பட்ட ரயில்கள், பாம்பனை தாண்டி இனி ராமேஸ்வரம் வரை மீண்டும் இயக்கப்பட உள்ளன. அந்த வகையில், ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சிக்கு நாளை (திங்கட்கிழமை) மதியம் 2.50 மணிக்கு விரைவு ரயில் புறப்படுகிறது. மறுமார்க்கமாக, திருச்சியில் புறப்படும் விரைவு ரெயில் ராமேசுவரத்துக்கு நாளை பகல் 12.25 மணிக்கு வருகிறது. அதேபோல், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு நாளை மாலை 5.30 மணிக்கு விரைவு ரயில் புறப்படுகிறது. மேலும், கோவையில் புறப்படும் ரயில் வருகிற 8-ந் தேதி காலை 6.15 மணிக்கு ராமேஸ்வரத்துக்கு வருகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து கோவைக்கு வருகிற 9-ந் தேதி இரவு 7.30 மணிக்கு விரைவு ரயில் புறப்பட்டு
செல்கிறது.ராமேஸ்வரம்-மதுரை பயணிகள் ரயில் நாளை ராமேஸ்வரத்தில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக மதுரை-ராமேஸ்வரம் ரெயில் காலை 10.45 மணிக்கு ராமேஸ்வரம் வந்தடைகிறது. பின்னர், காலை 11.40 மணிக்கு மீண்டும் மதுரை புறப்பட்டு செல்கிறது. இவைகள் உள்பட மொத்தம் 28 ரெயில் சேவைகள் புதிய பாம்பன் பாலம் வழியே ராமேஸ்வரத்துக்கு இயக்கப்பட உள்ளன.
