ஆளே இல்லாத தீவுகளுக்கு 10% வரி விதித்த டிரம்ப் – சுங்க வரி அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகள் மீது வர்த்தக வரிகளை விதித்துள்ளார். சில நாடுகளுக்கு குறைந்தபட்சமாக 10% முதல் சில நாடுகளுக்கு 40%-க்கும் மேல் வரை என வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மீது 27% வரி விதிக்கப்பட்டுள்ளது.
(டிரம்ப் காண்பித்த விளக்கப்படத்தில் இந்தியாவுக்கு 26% வரி என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதிகாரப்பூர்வ உத்தரவில் 27% என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாறுபாடு மற்ற சில நாடுகளுக்கான வரிவிதிப்புகளிலும் காணப்பட்டது)
இந்த வரி விதிப்புகளுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் சிலர் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளனர், சிலர் அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், அமெரிக்கா வரி விதித்துள்ள நாடுகளின் பட்டியலில் ஆளே இல்லாத தீவுகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இது தற்போது பெசுபொருளாகி வருகிறது. ஆனால், இந்த இடங்களில் இருந்து என்ன சரக்குகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பதில் தெளிவில்லை.இந்த வரி விரிப்புகள் காரணமாக வர்த்தகப் போர் உருவாகும் என்று அஞ்சப்படுகிறது.இத்தாலிய பிரதமர் ஜியார்ஜியா மெலோனி புதிதாக அறிவிக்கப்பட்ட அமெரிக்க வரிகளை “தவறானது” என்றும், இது வர்த்தகப் போருக்கு வழி வகுக்கும் என்றும் கூறியுள்ளார்.
“உலகின் பிற நாடுகளுக்கு ஆதரவாக மேற்கு நாடுகளைத் தவிர்க்க முடியாமல் பலவீனப்படுத்தும் ஒரு வர்த்தகப் போரைத் தடுக்கும் நோக்கில், அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொள்ள எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்” என்று தனது அறிக்கையில் அவர் தெரிவித்திருந்தார்.
