மனித குலத்தை போஷிக்கும் மாதர்களை மாண்புறச் செய்ய வேண்டும் செயலாளர் அமலினி

485874549_974594791484889_1884776523799701468_n.jpg

மனித குலத்தை போஷிக்கும் மாதர்களை மாண்புறச் செய்ய வேண்டும்

பிரதேச செயலாளர் அமலினி

மனித குலத்தை போஷித்து உயிர்ப்பூட்டும் மாதர்களை மாண்புறச் செய்ய வேண்டும் என மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் அமலினி கார்த்தீபன் தெரிவித்தார்.

“நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக – வலுவான பெண் வழித்தடமாக இருப்பாள்” எனும் இவ்வருட சர்வதேச மகளிர் தின தொனிப்பொருளில் அமைந்த இந்த இந்நிகழ்வில் பல்வேறு சவால்களை எதிர் கொண்டு கல்வி, பொருளாதாரம், தொழில் முனைவு உள்ளிட்ட பல்வேறு வாழ்வியல் அம்சங்களில் முன்னிலை வகிக்கும் பெண்கள் கௌரவித்துப் பாராட்டப்பட்டார்கள்.

இந்நிகழ்வுகளுக்கு இளைஞர் அபிவிருத்தி அகம், வீ எபெக்ற் நிறுவனங்களும் அனுசரணை வழங்கியிருந்தன.

பிரதேச மகளிர் அபிவிருத்தி அலுவலர் நவநிதனி ரமேஷ் தலைமையில் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதேச செயலாளர் அமலினி,

“குடும்பத்திலே தாரமாய், தாயாய், மகளாய், சகோதரியாய், சமுதாயத்திலே சமூகப் பணியாளராய், காரியாலயங்களிலே அலுவலராய், அதிகாரியாய், பாதுகாப்பு உத்தியோகத்தராய், விண்வெளியில் சஞ்சரிக்கும் விஞ்ஞானியாய், அரசியல் தலைவியாய் இப்படி இருக்கின்ற ஒவ்வொரு பெண்ணும் “அவள்தான்”; இந்த அவளுக்குள் நானும் நீங்களும் உள்ளடக்கம்.பல பாத்திரப் பதவிகளை வகிக்கும் பெண்கள் அவர்களது அர்ப்பணிப்பின் உச்சபட்சப் பொறுப்பாக நாட்டிற்று நல்ல பிரஜையை உருவாக்கிக் கொடுக்கன்றாள். மனித குலத்திற்காக இத்தனை பாரிய கடமைகளையும் அவள் பொறுப்புணர்ச்சியோடு அவள் ஆற்றுகின்றபோது அவளுக்குக் சமூகத்திலே ஒத்துழைப்பு, ஊக்குவிப்பு, பாராட்டு, அங்கீகாரம் கிடைக்கிறதா என்றால் அது விடையில்லாத வினாவாகவே இருக்கும். எனவே, மனித குலத்தை உயிர்ப்பிக்கும் மாதரின் மாண்பைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு பெண்கள் அளப்பரிய பணிகளை அர்ப்பணிப்போடு ஆற்றும்போது, தீர்மானங்களை முன்வைக்கும்போது, அவர்களுக்கான அங்கீகாரம், சமத்துவம், பாராட்டு என்பவை கிடைப்பதில்லை.

மகளீர் தினங்கள் கிராமப்புறங்களைச் சென்றடைய வேண்டும். அதன் மூலம் ஆக்கபூர்வமான செய்திகள் சமூகத்தின் அடிமட்டத்திற்குச் சென்றடைந்தால்தான் அங்கு சமத்துவ அபிவிருத்தி மூலம் பெண்கள் சவால்களை முறியடித்து முன்னேற முடியும். எனவே, மனப்பாங்கில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். ” என்றார்.

வாகiரைப் பிரதேசத்தில் கடந்த கால ஆயுத முரண்பாடுகளினால் மிக மோசமான பாதிப்புக்களை அங்குள்ள மக்கள் குறிப்பாக அத்தனை சுமைகளையும் தாங்கிக் கொண்டவர்களாக பெண்கள் இருந்தாரர்கள். அதேவேனை ஆயுத முரண்பாடுகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் மீண்டுடெழுவதிலும் அந்தப் பிரதேசப் பெண்கள் அர்ப்பணிப்புடன் உள்ளார்கள் என்பதால் அவர்களை முன்னேற்ற நாமும் சிரத்தை எடுத்து வருகின்றோம் என வாகரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திச் செயல் திட்டங்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் தங்கராஜா திலீப்குமார் கூறினார்.

இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக தகவல் தொழினுட்பப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் சிறியசல்யா சிறிவத்ஸன், வாகரைப் பொலிஸ் பெண்கள் சிறுவர் பிரிவுப் பொறுப்பதிகாரி எஸ். பிரதீபா உட்பட பிரதேச செயலக அதிகாரிகள், அலுவலர்கள், கிராம அலுவலர்கள், இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் உத்தியோகத்தர்களான ஏ. சஞ்ஜித், லதா ரவீந்திரராஜா உட்பட பிரதேச மகளிர் சங்கங்களின் பிரதிநிதிகள், யுவதிகள் மாணவிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *