மற்றொரு கோர விமான விபத்து – 12 பேர் பலி மத்திய அமெரிக்காவின் ஹோண்டுராஸில் நடந்த விமான விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் ஐந்து பேர் உயிர் தப்பியதாகவும், ஒருவர் இன்னும் காணவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹோண்டுராஸின் ரோட்டான் தீவு அருகே கரீபியன் கடலில் திங்கள் கிழமை மாலை நிகழ்ந்த கோர விமான விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
லான்ஸா (Lanhsa) விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஜெட்ஸ்ட்ரீம் 32 (Jetstream 32) விமானம், ரோட்டான் தீவில் உள்ள ஜுவான் மானுவல் கால்வெஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
ஹோண்டுராஸ் தேசிய காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதுவரை 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர், மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.விபத்துக்கான காரணம் குறித்து ஹோண்டுராஸ் சிவில் ஏரோநாட்டிக்ஸ் ஏஜென்சி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
முதற்கட்ட விசாரணையில், விமானம் ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டவுடன் வலதுபுறமாக கூர்மையான திருப்பத்தை எடுத்து கடலில் விழுந்ததாக தெரியவந்துள்ளது.
எனினும், வானிலை சாதகமாக இருந்ததால், அது விபத்துக்கு காரணமாக இருக்க வாய்ப்பில்லை என்று ரோட்டான் மேயர் தெரிவித்துள்ளார்.ஹோண்டுராஸ் அரசு, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க உறுதியளித்துள்ளது.�
