இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய சிம்ஃபொனி வரும் லண்டன் மாநகரில் இன்று வெளியிடப்படவிருக்கிறது. சிம்ஃபொனி என்றால் என்ன? ‘சிம்ஃபொனி’ இசைப்பது இசையுலகில் கௌரவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுவது ஏன்?
1. கேள்வி: சிம்ஃபொனி என்றால் என்ன?
பதில்: சிம்ஃபொனி (symphony) என்பது மேற்கத்திய செவ்வியல் இசை (Classical music) மரபில், பல்வேறு இசைக் கருவிகள் ஒன்றாக இசைக்கப்படும் ஓர் ஒத்திசைத் தொகுப்பு.
இந்த இசைத் தொகுப்பு, பல பகுதிகளை, பெரும்பாலும் நான்கு பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். இந்தப் பகுதிகள் movements என்று குறிப்பிடப்படுகின்றன. அதில் ஒரு பகுதி சொனாடா என்ற வடிவத்தில் இருக்கும். சிம்ஃபொனிகளுக்கு என மிகத் தெளிவான விதிகளும் கட்டுப்பாடுகளும் உண்டு.ஒரு சிம்ஃபொனி 30 முதல் 100 இசைக்கலைஞர்களைக் கொண்டு இசைக்கப்படும் ஒரு நிகழ்வாக இருக்கும். இதில் வயலின், செல்லோ போன்ற தந்திக் கருவிகள், ட்ரம்பட், புல்லாங்குழல், க்ளாரினெட், சாக்ஸபோன் போன்ற காற்றால் இசைக்கப்படும் கருவிகள், தாள இசைக் கருவிகள் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.
ஐரோப்பிய இசை வரலாற்றில் செவ்வியல் இசையின் காலகட்டமாகக் கருதப்படும் 1740 – 1820 காலகட்டத்தில் சிம்ஃபொனிகள் உருவாகத் துவங்கியதாக பிரித்தானியா கலைக்களஞ்சியம் தெரிவிக்கிறது. ஜோசஃப் ஹைடன், மொசார்ட், பீத்தோவன் ஆகியோர் மிகச் சிறந்த சிம்ஃபொனி தொகுப்புகளை உருவாக்கியவர்களாகக் கருதப்படுகிறார்கள்.பதில்: வேலியண்ட் (Valiant) என்ற பெயரில் இளையராஜா ஒரு சிம்ஃபொனியை உருவாக்கியிருக்கிறார். இதனைத் தான் உருவாக்கிய முதல் சிம்ஃபொனி எனக் குறிப்பிடுகிறார் இளையராஜா. இந்த சிம்ஃபொனி லண்டனின் Royal Philharmonic Orchestra மூலம் இசைக்கப்பட்டு, ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டுவிட்டது.
இந்தப் பதிவு, இன்று (மார்ச் 8ஆம் தேதி) வெளியிடப்படவிருக்கிறது. சிம்ஃபொனிகள் மிகச் சிக்கலான இசை வடிவமாககக் கருதப்படும் நிலையில், இதனை வெறும் 34 நாட்களில் எழுதி முடித்ததாக இளையராஜா தெரிவித்திருக்கிறார்.
3. கேள்வி: இந்தியர் ஒருவர் இதற்கு முன்பாக சிம்ஃபொனிகளை உருவாக்கியிருக்கிறார்களா?
பதில்: ஆசியாவிலிருந்து சிலர் சிம்ஃபொனிகளை உருவாக்கியிருந்தாலும், இந்தியர் ஒருவர் இதுவரை சிம்ஃபொனிகளை உருவாக்கியதில்லை. இந்தியாவில் உருவாக்கப்பட்ட சிறு சிறு இசைத் தொகுப்புகளை சிலர் சிம்ஃபொனி என அழைத்தாலும், அப்படி அழைப்பது சரியல்ல என தன்னுடைய பேட்டிகளில் சுட்டிக்காட்டுகிறார் இளையராஜா. சிம்ஃபொனிகளுக்கென உள்ள விதிகளுக்கு உட்பட்டு உருவாக்கப்படுவதை மட்டுமே சிம்ஃபொனி எனக் குறிப்பிட வேண்டும் என்கிறார் அவர்.
