5 ஆண்டுகளில் 1.5 மில்லியன் அஸ்வெசும பயனாளிகளை வலுவூட்ட எதிர்பார்ப்பு

download-4-6.jpeg

அடுத்த 5 ஆண்டுகளில் 1.5 மில்லியன் அஸ்வெசும பயனாளிகளை வலுவூட்ட எதிர்பார்ப்பு குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நீண்டகால மானியங்களை வழங்குவதற்குப் பதிலாக அவர்களில் பெரும்பாலானவர்களை வலுவூட்டுவதை அமைச்சு நோக்கமாகக் கொண்டிருப்பதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் (கலாநிதி) உபாலி பன்னிலகே அவர்கள் தெரிவித்தார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் நேற்றையதினம் (03) அவருடைய தலைமையில் நடைபெற்றபோதே இதனைத் தெரிவித்தார்.

அமைச்சின் பணிகள் மற்றும் அதன் நோக்கம் குறித்து குழுவுக்கு விளக்கமளித்த அமைச்சு அதிகாரிகள், இதுவரை ஏறத்தாழ 1.7 மில்லியன் பேர் அஸ்வெசும பயனாளிகளாக இருப்பதாகவும், எதிர்வரும் 5 வருடங்களில் இதில் 1.5 மில்லியன் பேரை வலுவூட்டுவதே அமைச்சின் நோக்கம் என்றும் தெரிவித்தனர்.

அத்துடன், 2025ஆம் ஆண்டில் அஸ்வெசும பயனாளிகளில் 3 இலட்சம் பேரை வலுவூட்ட எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். மேலும், வாழ்வாதார மேம்பாடு, உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் சமூக நலன்புரி ஆகிய துறைகளின் கீழ் 10 நிறுவனங்கள் அமைச்சின் கீழ் செயற்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அதேநேரம், குறைந்த வருமானம் பெறுவோருக்கு ஓய்வூதியம் மற்றும் அதற்கு சமமான சமூகப் பாதுகாப்புத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தல், சமூக வலுவூட்டல் மாதிரிக் கிராமங்களின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் ‘ஸ்மார்ட் கிராமம்’ திட்டம், கிராமப் புறங்களில் காணப்படும் நுண்நிதிப் பிரச்சினை, இயலாமையுடைய நபர்களின் பிரச்சினைகள், சிறுநீரக நோயாளிகளின் பிரச்சினை குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *