இரு தரப்பினர் இடையே கைகலப்பு – ஒருவர் வெட்டிக் கொலை – 4 பேர் கைது மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகே உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு முன்பாக, வீதி ஓரத்தில் பட்டா ரக வாகனத்தில் மரக்கறி வியாபாரம் செய்தவர்களிடையே ஏற்பட்ட வாய்தர்க்கத்தை அடுத்து இடம்பெற்ற மோதலில் வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (03) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் 4 பேரை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்தவர் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய டிலக்ஷன் என்ற வர்த்தகர் ஆவார், இவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
மட்டக்களப்பு அரசடி பகுதிக்கும் கல்லடி பாலத்துக்கும் இடையிலுள்ள வீதி ஓரத்தில், பட்டா ரக வாகனங்களில் மரக்கறிகளை கொண்டுவந்து வியாபாரிகள் வியாபாரம் செய்வது வழக்கம்.
சம்பவ தினமான நேற்று இரவு சுமார் 7:00 மணியளவில், உயிரிழந்தவரின் சகோதரர் தனது பட்டா ரக வாகனத்தை நிறுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அருகில் மற்றொரு வர்த்தகர் தனது வாகனத்தை நிறுத்தி வியாபாரம் செய்ததால், இருவருக்கும் இடையே வியாபார போட்டி காரணமாக வாய்தர்க்கம் ஏற்பட்டது.
இதையடுத்து, உயிரிழந்தவரின் சகோதரர் தனது அண்ணனான டிலக்ஷனுக்கு கையடக்க தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து அங்கு வரவழைத்தார்.
டிலக்ஷன் வந்து, தனது சகோதரருடன் சேர்ந்து வாய்தர்க்கத்தில் ஈடுபட்ட மற்றொரு வர்த்தகர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
