மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கி, அவரது காதுகளில் ஒன்றை காயப்படுத்திய சம்பவம்

8424f690-1561-11ee-9179-c5f6e7701b7a.jpg.webp

மாணவன் சரியாக முடி வெட்டவில்லை என தாக்கிய அதிபருக்கு விளக்கமறியல் பொலன்னறுவை பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கி, அவரது காதுகளில் ஒன்றை காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெதிரிகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அதிபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹிங்குராக்கொடை பதில் நீதவான் நாலக மிஹிர பண்டார உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவன் மற்றும் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவனிடம் நடத்தப்பட்ட தடயவியல் மருத்துவப் பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பதில் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மெதிரிகிரிய பொலிஸார், 17 வயது மாணவன் ஒருவரை, அவரது பாடசாலையின் அதிபர், பாடசாலை நேரத்தில் கடுமையாக தாக்கி சித்திரவதை செய்ததாக வழங்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து, சந்தேக நபரை விசாரித்து கைது செய்ததாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தாக்குதலின் காரணமாக மாணவரின் காதுகளில் காயம் ஏற்பட்டு இரத்தம் வெளியேறியதாகவும், மெதிரிகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்குரிய அதிபர், மாணவன் சரியாக முடி வெட்டவில்லை என்றும், கருப்பு காலுறை அணிந்து பாடசாலைக்கு வந்ததாகவும் குற்றம் சாட்டி, இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் மெதிரிகிரிய பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்ததோடு அதிபர் இதற்கு முன்பு மாணவனை பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்படுத்தி இருப்பதும் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதற்கிடையில், சந்தேக நபர் பொலிஸரால் கைது செய்யப்பட்டும் போது, அவர் உடல்நிலை சரியில்லாததாகக் கூறி மெதிரிகிரிய ஆதார வைத்தியசாலையில் அனுமதியாகி இருந்ததோடு, பதில் நீதவான் வைத்தியசாலைக்குச் சென்று சந்தேக நபரான அதிபரை பரிசோதித்து, அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

ஹிங்குராக்கொட வலயக் கல்விப் பணிமனையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அதிபர் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *