புதிய ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை

download-3-49.jpeg

மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்ட அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை நேற்றுமுன்தினம் (22) சனிக்கிழமை மடு திருத்தலத்தில் வைத்து ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்ட நிலையில், நேற்றைய தினம் (23) மன்னார் மறைமாவட்ட ஆயராக பணி பொறுப்பேற்றுக் கொண்டார்.

நேற்று (23) மாலை மடு திருத்தலத்தில் இருந்து மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை மாலை 4 மணியளவில் மன்னார் தள்ளாடி அந்தோனியார் ஆலய பகுதியை வந்தடைந்தார்.

அதனைத் தொடர்ந்து ஆயர், மன்னார் பிரதான பாலத்தடி வரை மோட்டார் சைக்கிள் பவனியுடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட வாகனத்தில் ஏற்றப்பட்டு அங்கிருந்து பவனியாக மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்திற்கு இன்னிசை வாத்தியங்களுடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் பணிப் பொறுப்பு ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு, மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் பி.கிறிஸ்து நாயகம் அடிகளாரினால் திருத்தூது மடல் வாசிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட ஆயராக கடந்த 7 வருடங்களாக பணியாற்றிய மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையினால் புதிய ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையிடம் புனித செபஸ்தியார் பேராலயத்தின் திறவுகோல் வழங்கப்பட்டது.

புனித செபஸ்தியார் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை சுரேந்திரன் றெவல் அடிகளாரினால் புதிய ஆயருக்கு நற்கருணை பேழைக்கான திறவு கோல் வழங்கப்பட்டது.

ஆயர் பேரருட்திரு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையினால் மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயரிடம் செங்கோல் வழங்கப்பட்டது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *