வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

download-11-8.jpeg

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கும் 4ஆவதுதவணை கொடுப்பனவான 335 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் விரைவில் நாட்டுக்கு கிடைக்கும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த மாதம் 28ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மீளாய்வு சமர்ப்பிக்கப்படுகிறது என்பதை சபையில் குறிப்பிட்ட அமைச்சர், அந்த மீளாய்வு நிறைவேற்றப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு 4ஆவது தவணை கொடுப்பனவாக 335 மில்லியன் டொலர்கள் கிடைக்கவுள்ளது என்றும் நாம் அதனை சாத்தியமாக்கிக் கொள்ள முடியும் என்ற சுமுகமான எதிர்பார்ப்புடன் உள்ளோம் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் தற்போது நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பு 6.1 பில்லியன் டொலர்கள் என்ற நிலையான தன்மையில் காணப்படுகின்றது என தெரிவித்த அமைச்சர், தற்போது தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 15 வீதமான இலக்கை நாம் முன்னெடுத்து 2025 ஆம் ஆண்டுக்கான இலக்கு நோக்கி முன் செல்கின்றோம் என்றும் தெரிவித்தார்.

அந்தவகையில் எதிர்க்கட்சியினர் இருளில் கால் பதித்து தட்டு தடுமாறி சொல்வதற்கு ஒன்றும் இல்லாத நிலையில் எதையோ பிதற்றிக் கொண்டு செல்வதைக் காண முடிகின்றது என்பதை சுட்டி காட்டிய அமைச்சர் நாம் அதனால் குழப்பம டையப்போவதில்லை.

நாம் நீண்ட கால பயணத்தை ஆரம்பித்து விட்டோம் அதற்கான ஸ்திரமான அடித்தளம் போடப்பட்டு விட்டது என்றும் தெரிவித்தார். நிலையானதாகவும் பலமானதாகவும் அதனை முன்னெடுப்போம். அதனை எத்தகைய இடறல்கள் கோஷங்களாலும் தடுக்க முடியாது.

அதற்கான ஆணையை நாட்டு மக்கள் எமக்கு வழங்கியுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (22) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

“மக்களின் ஆணைக்கு இணங்கிய பயணத்தையே நாம் மேற்கொண்டுள்ளோம் அதற்கு முரணாக எதனையும் நாம் செய்யப் போவதில்லை மக்களின் பல்வேறு எதிர்பார்ப்புகள் காணப்படுகின்றன அதனை நிறைவேற்றிய வண்ணமே நாம் பயணிக்கின்றோம்.

அதேபோன்று ஊழல் மோசடியற்ற தூய்மையான நாட்டை ஆட்சியை அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்கான அடித்தளத்தை நாம் இட்டுள்ளோம்.

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக எந்த வித வன்முறையும் இல்லாத அமைதியானதும் நீதியானதுமான பாராளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றன.

எமது அரசாங்கத்தால் அது முடிந்துள்ளது இது முழு உலகக்கும் முண்ணுதாரணமாகும்.

அதேபோன்று வடக்கு, கிழக்கு, மலையகம், தெற்கு என அனைத்து மக்களும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழக்கூடிய சூழ்நிலையை கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப அடித்தளத்தை நாம் இட்டுள்ளோம்.

அதே போன்று எமது பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய செய்த மற்றும் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் நாம் சிறந்த பொறிமுறையின் கீழ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம்.

நாம் அதில் குழப்பமடைய மாட்டோம். அவசரப்படவும் மாட்டோம்.

சட்ட ரீதியில் சட்ட முறைமைகளுக்கு இணங்க உரியவிதத்தில் உரிய காலத்தில் நாம் அதனை முன்னெடுப்போம் அந்த வகையில் நாம் நாட்டு மக்களுக்கு ஒன்றை உறுதியாக கூறுகின்றோம்.

அந்த விசாரணைகள் முடியும்போது இந்த நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்ற அரசியல் கலாசாரத்தை முன்னெடுத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம்.

குறுகிய கால வேலைத் திட்டத்தின் மூலம் நாட்டின் பொருளாதார நிலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்க முடிந்துள்ளது.
குறுகிய கால மத்திய கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டங்களுக்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம்.

அந்த வகையில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திர நிலைக்கு கொண்டு வருவதற்கு உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத் திட்டம் அவசியமாகும். பொருட்கள், சேவைகள் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட நீண்டகால வேலைத்திட்டம் அனைவராலும் உணரப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் கொள்கை பிரகடனத்தில் அது தொடர்பில் தெரிவித்துள்ளது.
நாம் தற்போது நீண்ட கால வேலைத் திட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில் உள்ளோம்.

அதனால் தான் உற்பத்திக்காக முன்னெடுக்கப்படும் செலவுகளை குறைக்கும் வகையில் முக்கியமான பல தீர்மானங்களை அண்மைக் காலத்தில் எடுத்துள்ளோம்.

விவசாயத்துறை கைத்தொழில் துறை உட்பட பல்வேறு துறைகளிலும் உற்பத்தி செலவுகளை குறைப்பது தொடர்பில் நாம் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளோம்.

சுற்றுலாத்துறை மற்றும் கைத்தொழில் துறை உட்பட பல துறைகளிலும் மின் கட்டணத்தை குறைத்தல், விவசாயத் துறையில் எதிர்கொள்ள நேரும் உற்பத்தி செலவுகளை குறைத்தல், உர மானியம் வழங்குதல் ஆகியவற்றின் ஊடாக நீண்ட கால,உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட தேசிய வேலைத் திட்டத்திற்கு ஆரம்ப அடித்தளத்தை இட்டுள்ளோம்.

நாம் தற்போது எதிர்நோக்குகின்ற பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் தெரிவிப்பதானால் அதனை முகாமைத்துவம் செய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்துடனான தொடர்புகளை நாம் மேற்கொண்டுள்ளோம்.

அந்த வேலைத் திட்டத்தின் மூலம் நாம் தற்காலிக பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்வதை முன்னெடுக்கின்றோம். அந்த நடவடிக்கைகளின் மூலம் நீண்ட கால பொருளாதார வேலைத்திட்டத்தின் வெற்றி கொள்வது கடினம்.

எனினும் அதன் மூலமே வீழ்ச்சியடைந்துள்ள நிலையிலிருந்து நாம் மீண்டெழக் கூடிய செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *