மும்மொழி வேண்டுமா என்பது குறித்து தமிழகத்தில் மார்ச் 1ம் தேதி முதல் 90 நாட்கள் பா.ஜ., கையெழுத்து இயக்கம் நடத்த போவதாக அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.இதுகுறித்து சென்னையில் அவர் அளித்த பேட்டி;
தமிழகத்தில் தி.மு.க.,வினர் குறிப்பாக அமைச்சர்கள் மும்மொழி கொள்கை என்றால் ஹிந்தியை திணிப்பதாக தவறான பிரசாரத்தை முன் வைக்கின்றனர். தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், அரசு பள்ளிகளை விட அதிகமாக இருக்கின்றனர்.
அவர்களின் கல்வி குறித்து ஓராண்டுக்கு முன்பு சட்டசபையில் தாக்கல் செய்த ஆவணங்களின் படி எடுக்கப்பட்ட குறிப்புகளில் 52 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளிலும், 56 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளிலும் படிக்கின்றனர். தனியார் பள்ளியில் இருந்து மாணவர்கள் அதிகம்.
சி.பி.எஸ்.இ., கல்வித் திட்டத்தில் பயில்வராக இருந்தால் அவர்கள் ஹிந்தி படிக்கின்றனர். தமிழகத்தில் மெட்ரிகுலேஷனில் படிப்பவர்களுக்கு தமிழ் மொழி என்று எங்கேயும் கட்டாயமாக இல்லை. தமிழக மெட்ரிகுலேஷனை பொறுத்தவரையில் ஆப்ஷனல் மொழி என்ன என்றால் தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, சமஸ்கிருதம், ஹிந்தி, உருது, பிரெஞ்ச் மொழிகளை தேர்ந்து எடுக்கலாம்.
ஆங்கில வழியில் மெட்ரிக்குலேஷனில் படிப்பவர்களுக்கு இத்தனை வாய்ப்புகள் உள்ளன. 56 லட்சம் மாணவர்கள் வேற படிப்பில் உள்ளனர். 52 லட்சம் அரசு பள்ளி மாணவர்களை மட்டும், கட்டாயப்படுத்தி ஆங்கிலம், தமிழ் என 2 மொழிகளை தான் படிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.
தமிழக அரசு பள்ளிகளில் படிப்பவர்கள் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு மாறுகின்றனர். தமிழகத்தில் இந்த சந்தை வியாபாரம் மட்டுமே 30,000 கோடி ரூபாயாக உள்ளது. இன்று தி.மு.க.வைச் சேர்ந்தவர் தான் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவராக பி.டி. அரசகுமார் இருக்கிறார். முதலில் இவர் பா.ஜ.,வில் இருந்தார்.
அரசு குறிப்பின் படி 56 லட்சம் மாணவர்கள் என்று நான் கூறினேன். ஆனால் அரசகுமார் 68 லட்சம் பேர் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர் என்று கூறுகிறார். எல்லோரும் தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக அரசு பள்ளிகளில் இரு மொழி கொள்கையை வைத்துள்ளனரா என்பது எனது முதல் கேள்வி.
தமிழ் தேசியம் பேசும் சீமான் 2016ல் தேர்தல் வாக்குறுதியில் விருப்ப மொழியாக ஹிந்தி உள்பட உலகத்தில் இருக்கும் எல்லா மொழிகளும் இருக்கலாம் என்று கூறுகிறார். ஆனால் இப்போது ஹிந்தி என்ற வார்த்தை தமது தேர்தல் அறிக்கையில் இல்லை என்று மறுக்கிறார்.
இன்றைக்கு புதிய கல்விக்கொள்கை என்பதும் அதேதான். 5ம் வகுப்பு வரை கட்டாய தமிழ் மொழி உள்ளது. இன்று தமிழகத்தில் பயிற்று மொழி, சி.பி.எஸ்.இ,, பள்ளி என எந்த போர்டாக இருந்தாலும் ஆங்கிலத்தில் தான் பயிற்று மொழி உள்ளது. ஆங்கிலம் என்பது கட்டாய பாடமொழி.
அடுத்து நடிகர் மற்றும் த.வெ.க., தலைவர் விஜய் பற்றி கூறுகிறேன். அவர் தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளி நடத்துகிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அந்த பள்ளியின் பெயர் விஜய் வித்யாஸ்ரம். அவரது இடத்தை 2017ம் ஆண்டு முதல் 2052 வரை 35 ஆண்டுகளுக்கு அவரது இடத்தை ஒரு அறக்கட்டளைக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளார்.
அந்த அறக்கட்டளை விஜய் தந்தை சந்திரசேகர் பெயரில் பதிவாகி இருக்கிறது. சந்திரசேகர் டிரஸ்ட் நடத்தக்கூடிய பள்ளிதான் விஜய் வித்யாஸ்ரம். அவர்கள் நடத்தும் சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஹிந்தி உள்ளது. அமைச்சர் மகேஷ் குழந்தை பிரெஞ்ச் படிக்கிறார்.
இன்றைய அரசியல்வாதிகள் வெளியில் வந்து, அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் 2 மொழிகள் படியுங்கள் என்று எதை வைத்து கூறுகின்றனர். சென்னையில் தி.மு.க., எம்.பி., கலாநிதி வீராசாமி குடும்பம் மெட்ரிகுலேஷன் பள்ளி நடத்துகிறது. இந்த பள்ளியில் 2வது மொழியாக தமிழ், ஹிந்தி,பிரெஞ்ச் என எதையாவது எடுத்துக் கொள்ளலாம்.
மெட்ரிகுலேஷன் பள்ளியில் தமிழ் கட்டாயம் இல்லை. அங்கு தமிழும் படிக்கலாம், ஹிந்தியும் படிக்கலாம், பிரெஞ்சும் படிக்கலாம். இன்று அண்ணாமலை சொன்ன தரவுகளுக்கு ஆதாரம் இல்லை என்று தமிழக அரசு கூறுகிறது. இது வெட்கக்கேடு.
தமிழகத்தில் 30 லட்சம் பேர் மும்மொழி கொள்கை படிக்கின்றனர் என்று நாங்கள் சொல்கிறோம். தமிழ்நாடு அரசு என்ன சொல்ல வேண்டும்? இவ்வளவு டேட்டா கைகளில் இருக்கிறது, சாப்ட்வேர் இருக்கிறது. நான் 30 லட்சம் என்று சொன்னதற்கு ஆதாரம் இல்லை என்றால் நீங்கள்(தமிழக அரசு) ஆதாரம் கொடுங்கள்.
எத்தனையோ ஆயிரம் பேர் வேலை பார்க்கும் தமிழக அரசு, மும்மொழி கொள்கையில் இருப்பது 30 லட்சம் பேரா, 20 லட்சம் பேரா என்று மழுப்புகிறீர்கள். அதற்கு மேல்தான் படிக்கின்றனர். நான் குறைவாகத்தான் 30 லட்சம் பேர் என்று கூறுகின்றேன்.
தமிழக அரசு வெள்ளை அறிக்கை கொடுக்கட்டும். தமிழகத்தில் எத்தனை பேர் மும்மொழியில் படிக்கின்றனர் என்று பார்ப்போம். மக்களுக்கு ஒரு நியாயம், நடிகர் விஜய், சீமான் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஒரு நியாயம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
எதற்காக வீண் ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள்? மக்களுக்கு உபத்திரவம் கொடுப்பதற்காக இண்டி கூட்டணி சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்கள்? நீங்கள் மெட்ரிகுலேஷன் பள்ளி நடத்துகிறீர்கள், அதில் தமிழ் கட்டாயம் இல்லை.
