உலக காலநிலை பிரச்சினைகள் வறியவர் செல்வந்தர் என்று பாராமல் அனைவரினதும் கதவுகளை தட்டிக்கொண்டிருப்பதாகவும், தேச எல்லைகளைக் கடந்து பயணிக்கின்ற சவால்களுக்கு முகங்கொடுக்க நாங்கள் உலகளாவிய பிரஜைகள் என்ற வகையில் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் உலக அரச உச்சி மாநாட்டில் இன்று (12) உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
பொருளாதார அபிவிருத்தி, புத்தாக்கம் மற்றும் அரச நிர்வாக மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையின் நோக்கு என்ற தலைப்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரையாற்றினார்.
இந்த உரையில் நிலையான அபிவிருத்தி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான இலங்கையின் அர்ப்பணிப்பும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
மானிட வர்க்கம் தொடர்பான முக்கியமான துறைகளில் எதிர்கால உத்திகள் மற்றும் திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு இந்த மாநாடு உந்து சக்தியாக அமையும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்க உலகளாவிய கூட்டு செயற்பாடும், முன்னணியொன்றினது அவசியத்தையும் வலியுறுத்தினார்.
சமூக நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியானது தரமிக்க தேசமொன்றைப் போன்றே வளமிக்க உலகமொன்றுக்கு மிகவும் முக்கியமானதாக அமைகின்றது எனவும், உடன்படிக்கைகளையும் சட்டங்களையும் முறைசார்ந்தவகையில் அமுலாக்குவதும், குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கும் உறுதி நிலையற்ற சமுதாயங்களுக்கு முறைப்படி ஒத்துழைப்பினை வழங்குவதும் , உத்தியோகத்தர்களின் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்காக சுதந்திர ஊடகங்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தினார்.
டிஜிட்டல் அணுகல் உரிமைகள், சுற்றாடல் உரிமைகள் உள்ளடங்களாக 1948 ஆம் ஆண்டு மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலில் புதுப்பிக்கப்பட்ட உலகளாவிய பிரகடனத்தின் அவசியம் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
உலகளாவிய நிதியளிப்பு நிபந்தனைகள் அதிகரிக்கின்றமை, எதிர்காலத்தில் செலுத்தப்படவுள்ள பெருந்தொகையான கடனைச் செலுத்துதல் மற்றும் இறையாண்மைக் கடன் நெருக்கடிக்கு முகங்கொடுக்க நிகழ்கால சர்வதேச நிதிக்கட்டமைப்பு பலவீனமான வகையில் தயாராகியமையால் உலகளாவிய நோக்கு மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நவீன உலகிற்கு நியாயமானவகையில் சீராக்கிக்கொள்ளக்கூடிய நிதிசார் திருத்தங்களின்பால் மாற்றமடைவது மிகவும் முக்கியமான விடயமாக அமைகின்றது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
