மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (11.02.2025) பிற்பகல் 2:30 மணிக்கு மாவட்ட சமூக வலுவூட்டல் நிகழ்ச்சி திட்டம் ஆரம்பமாகியது. இந்நிகழ்ச்சி திட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் இ.சிறிநாத் அவர்கள் இந்நிகழ்ச்சி திட்டத்தின் ஆரம்ப காணொளியானது சிங்கள மொழியில் மாத்திரம் ஒளிபரப்பப்பட்டிருந்தமைக்கு தனது வலுவான கண்டனத்தையும், அதிருப்தியையும் தெரிவித்து தனது உரையை இவ்வாறு தொடர்ந்தார்.
மட்டக்களப்பு மாவட்டமானது சகல வளங்களையும் கொண்டு காணப்படுகின்ற மாவட்டமாக இருந்தாலும் வறுமை கோட்டுக்கு கீழேயும், வறுமையின் பிடியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று வரை ஓர் பாரிய பிரச்சினையாக உள்ளது. இவ்வளவு வளங்கள் இருந்தும் ஏன் மட்டக்களப்பு மாவட்டத்தினால் ஓர் அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக மாற முடியாத சூழ்நிலை காணப்படுவதன் காரணத்தையும் அறிந்து எதிர்காலத்தில் அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்து தன்னிறைவு அடைந்த ஓர் மாவட்டமாக மட்டக்களப்பை மாற்ற முடியும் என்ற ஓர் செயற்திட்ட நகர்வினையும் வரையறுக்குமாறும் அங்குள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் இவ் சமூக வலுவூட்டல் நிகழ்வில் பங்கு கொண்ட அரசு அதிகாரிகள், அரசாங்கத் திட்டத்தினை மக்களுக்கு பாகுபாடு இல்லாமல் சகல மக்களும் பயனடையக்கூடிய வகையிலும் அதனை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்றும் தனது வேண்டுகோளை விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து மேற்படி திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது களநிலை ஊழியர்களால் எதிர்கொள்ளப்படும் அதிக வேலைப்பளு சம்பந்தமாக மன உளைச்சல்களையும் கருத்திற்கொண்டு அவர்களுக்கு வழங்கப்படும் வேலைகள் மன நிறைவாகவும், சமாதானமாகவும் மக்களின் முன்னிலையில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தி இருந்தார்
