நான் மற்ற சகோதரர்களுக்கு எதிரானவன் கிடையாது என்று ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகளை தொடர வேண்டும் என்று தான் வேண்டுகோள் வைத்ததாக கூறிய நவாஸ் கனி, பிரச்சனையை வேறு ஏதோ திசையில் கொண்டு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது. இங்கு
�
இஸ்லாமியர்கள் கந்தூரி கொடுப்பதற்கு இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றன. இதனிடையே திருப்பரங்குன்றம் மலையில் வக்பு வாரியத் தலைவரும், ராமநாதபுரம் எம்பி-யுமான நவாஸ் கனி ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அவர் மலையில் அமர்ந்து உணவு சாப்பிட்ட புகைப்படங்கள் வெளியாகின. இதனை பாஜகவினர், திருப்பரங்குன்றம் மலையில் அமர்ந்து நவாஸ் கனி பிரியாணி சாப்பிட்டதாக கூறத் தொடங்கினர். இதன் காரணமாக திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தமிழ்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் மதுரையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நவாஸ் கனி
�
திருப்பரங்குன்றத்திற்கு சென்றதே பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததற்கு காரணம் என்று கடுமையாக விமர்சித்தார். இதனிடையே மதுரை எம்பி சு.வெங்கடேசன் தரப்பில், திருப்பரங்குன்றம் மலை சர்ச்சையாக காரணமே மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் தோல்வி என்று காட்டமாக விமர்சித்தார். இந்த நிலையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள அரபிக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி கலந்து கொண்டார். அப்போது நவாஸ் கனி
�
பேசுகையில், ஒவ்வொரு மதத்தினரையும் மதிக்கிறேன். அவர்களை எப்போதும் சகோதரர்களாகவே கருதி வந்துள்ளேன்.இஸ்லாமியர்கள் பின்பற்றி வந்த நடைமுறை மறுக்கப்படும் போது, வக்பு வாரிய தலைவர் என்ற முறையில் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் ஏற்கனவே இருந்த நடைமுறையில் இருந்து, தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சில நடைமுறைகளை தொடர வேண்டும் என்றுதான் கூறினேன்.
�
இதனை திரித்து மறைத்து நடக்காததை நடந்ததாக கூறி, எங்கள் சகோதரர்களுக்கு எதிராக திரித்து விதைத்துவிட்டனர். பிரச்சனையை வேறு திசையில் கொண்டு சென்றுவிட்டனர். எங்களிடையே இருக்கும் ஒற்றுமையை சிதைப்பதற்கு திட்டமிட்டு செயல்பட்ட அவர்களின் திட்டங்கள் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. நான் மற்ற மத சகோதரர்களுக்கு எதிரானவன் அல்ல. யாரையும் புண்படுத்தும் விதத்தில் நான் பேசுவது கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
�
