புலம்பெயர்ந்தோர் அமெரிக்காவுக்குள் நுழைவது எப்படி.. டேரியன் இடைவெளி என்பது என்ன அமெரிக்க அதிபராகப் பதவியேற்றிருக்கும் டொனால்டு ட்ரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதில், சட்டவிரோத குடியேற்றத்துக்குத் தடையும் ஒன்று. குடியேற்றக் கொள்கையில் பல கெடுபிடிகளைக் காட்டி வரும் ட்ரம்ப், இந்தியாவிற்கும் கருணை காட்டவில்லை. அதன்படி, அமெரிக்காவில்
சட்டவிரோதமாகப் புலம்பெயர்ந்த 104 பேர் அடையாளம் காணப்பட்டு, முதற்கட்டமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டு விமானத்தில் ஏற்றி அழைத்து வரப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.இந்த நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்தது எப்படி என்பது பற்றியான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதில் ஒன்று டேரியன் இடைவெளி. இதன்மூலமாகவே புலம்பெயர்ந்தோர் பலரும் அமெரிக்காவுக்குள் நுழைவதாகவே தகவல்கள்
தெரிவிக்கின்றன. கொலம்பியாவையும் பனாமாவையும் இணைக்கும் ஒரு பரந்த, சாலையற்ற காட்டுப் பகுதியே டேரியன் இடைவெளியும் ஆகும். இந்த வழியைக் கடப்பது மிகவும் ஆபத்தான ஒன்றாக இருந்தாலும் புலம்பெயர்வோர் இவ்வழியாகவே கடக்கின்றனர். டேரியன் இடைவெளி என்பது அடர்ந்த மழைக்காடுகள், சதுப்பு நிலங்கள் மற்றும் மலைகளைக் கொண்ட 97 கி.மீ நீளமான பகுதியாகும். இது அலாஸ்காவிலிருந்து அர்ஜென்டினா வரை நீண்டுசெல்லும் சாலை அமைப்பான பான்-
அமெரிக்க நெடுஞ்சாலையில் உள்ள ஓர் இடைவெளி பாதையாகும். இப்பகுதியில் யாரும் ஊடுருவ முடியாது. காரணம், அதன் நிலப்பரப்பு. தவிர கடுமையான காலநிலையும் உள்கட்டமைப்பும் அதற்கு மேலும் வசதியை ஏற்படுத்தித் தருகின்றன. ஆனால் அமெரிக்காவை அடைய விரும்பும் புலம்பெயர்ந்தோருக்கு, இது தவிர்க்க முடியாத நுழைவாயிலாக மாறியுள்ளது.டேரியன் இடைவெளியைக் கடப்பவர்கள்
செங்குத்தான மலைகள், சேற்று சதுப்பு நிலங்கள், வேகமாக ஓடும் ஆறுகள் மற்றும் ஆபத்தான வனவிலங்குகளை எதிர்கொள்கிறார்கள். இந்தக் காடு விஷ பாம்புகள், ஜாகுவார் மற்றும் கொடிய பூச்சிகளின் தாயகமாகும். அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கும் பல இந்தியர்கள், ‘கழுதைப் பாதை’ என்று அழைக்கப்படும் வழியைப் பின்பற்றுகிறார்கள். இது மத்திய அமெரிக்க நாடுகளான
பனாமா, கோஸ்டாரிகா, எல் சால்வடார் மற்றும் குவாத்தமாலா போன்ற நாடுகளுக்குச் செல்வதை உள்ளடக்கியது. அங்கு விசாக்கள் எளிதாகப் பெறப்படுகின்றன. அங்கிருந்து, அவர்கள் மெக்சிகோவிற்குச் சென்று பின்னர் அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சிக்கிறார்கள். பெரும்பாலும் ஆபத்தான பாதையைக் கடக்க ஆயிரக்கணக்கான டாலர்களை வசூலிக்கும் மனித கடத்தல்காரர்கள் உதவியுடன் அவர்கள் பயணம்
மேற்கொள்கிறார்கள்.கடுமையான விசா விதிமுறைகள் காரணமாக அமெரிக்காவிற்கு நேரடி விமான வழித்தடங்கள் கடினமாகி வருவதால், இந்த முறை பெரிய அளவில் பிரபலமடைந்து வருகிறது. இருப்பினும், இந்தப் பாதையைக் கட்டுப்படுத்தும் குற்றவியல் அமைப்புகளிடமிருந்து மிக முக்கியமான அச்சுறுத்தல்கள் வருகின்றன. கடத்தல்காரர்கள், போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் ஆயுதக் குழுவினர் ஆகியோர் புலம்பெயர்ந்தோரை வழிமறித்து கொள்ளையடிக்கின்றன; தவிர அவர்களை
வன்முறைக்கு உட்படுத்துகின்றன. எனினும், அவர்களுக்கு பாதுகாப்பான பாதையை உறுதிப்படுத்துகின்றனர். 2023ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் புலம்பெயர்ந்தோர் மூலம் அவர்கள் டாலர் 57 மில்லியன் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது.சமீபகாலமாக, டேரியன் இடைவெளியைக் கடப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டில், 5.2 லட்சத்திற்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகம். 2024ஆம் ஆண்டில், 3 லட்சத்திற்கும்
அதிகமானோர் கடந்துள்ளனர். இருப்பினும் அதிகரித்த அமலாக்க முயற்சிகள் காரணமாக எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஆண்டுதோறும் சில ஆயிரம் பேர் மட்டுமே இந்தப் பாதையைப் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால், இன்று, இது அதிக ஆபத்துள்ள இடம்பெயர்வு நெடுஞ்சாலையாக மாறியுள்ளது. இதன்மூலம் வெனிசுலா, ஹைட்டி, ஈக்வடார், பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மக்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்தப் பயணம் 7 முதல் 15 நாட்கள் வரை
ஆகக்கூடும்.அதேநேரத்தில் இந்த நாட்களில் புலம்பெயர்ந்தோர் உணவு மற்றும் நீர் பற்றாக்குறை, நோய் ஆகியவற்றால் உயிர் பிழைக்காமலும் இறந்துள்ளனர். நெரிசலான தங்குமிடங்களில் உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ உதவி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இல்லாததால், பல புலம்பெயர்ந்தோர் சிக்கித் தவிக்கின்றனர். இதனால், டேரியன் இடைவெளி ஒரு மனிதாபிமானப் பேரழிவாகவே
பார்க்கப்படுகிறது. 2015-2022 வரை 312 புலம்பெயர்ந்தோர் இறப்புகள் அல்லது காணாமல் போன சம்பவங்களும், 2021 மற்றும் 2023க்கு இடையில் 229 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 2023ஆம் ஆண்டில் மட்டும், MSF குழு 676 பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளது. 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 233 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மறுபுறம், இந்தப் பாதையைப் பயன்படுத்தும் அதிகமான புலம்பெயர்ந்தோரின் காரணமாக, சுற்றுச்சூழல் பேரழிவும் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது
