மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்திற்கு பதிலாக பழங்காநத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்தப்படும் என தர்கா நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து ராமநாதபுரம் எம்ப நவாஸ்கனியுடன்,
திருப்பரங்குன்றம் மலைக்குச் சென்றவர்கள் அசைவ உணவை உட்கொண்டதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் கோயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இந்து முன்னணி அறிவித்திருந்தது. ஆனால் மத ரீதியிலான பிரச்சினை ஏற்படும் என்பதால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆயினும் திருப்பரங்குன்றத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி பொதுச் செயலாளர் கலாநிதிமாறன் அறிவித்திருந்தார். இதையடுத்து மதுரை மாவட்டம் முழுவதும் நேற்றும்
இன்றும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டிருந்தார். 144 தடை உத்தரவை எதிர்த்தும் அதை ரத்து செய்யக் கோரியும் இந்து முன்னணி அமைப்பினர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசர வழக்காக விசாரிக்க கோரினர். இந்த நிலையில் இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், தற்போது தை பூச
விழா நடைபெற்று வருவதால் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தினால் தேவையற்ற மத பிரச்சினை ஏற்படும். அது மட்டுமல்லாமல் சிலர் இந்த பிரச்சினையை அயோத்தி, பாபர் மசூதி பிரச்சினை போல் சித்தரிக்க முயற்சிக்கிறார்கள்.எனவே ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பிப்ரவரி 11 ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா, தைப்பூசத் திருவிழா ஆகியவை நடத்தப்படும். இதற்காக பக்தர்கள் வருகை
தருகிறார்கள். ஆனால் இரு தினங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பக்தர்களுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும் ஒரு குறிப்பிட்ட போராட்டத்திற்காக மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே தடை உத்தரவை ரத்து செய்து அனுமதி வழங்க வேண்டும் என வாதம் முன் வைக்கப்பட்டது.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆர்ப்பாட்டம் நடத்த ஏன் அனுமதி வழங்கவில்லை, இரு நாள்கள் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றால்
எந்த நாளில், எந்த இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி வழங்குவீர்கள் என்பதை மதுரை மாவட்ட காவல் ஆணையரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் என கூறி இந்த வழக்கை இன்று மதியம் 2.15 மணிக்கு ஒத்தி வைத்தனர். அப்போது அரசு தரப்பினர், வரும் 19 அல்லது 20 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த மதுரையில் வேறு இடத்தில் அனுமதி வழங்க தயார் என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு, மாற்று இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த தயார். ஆனால் இன்றே ஆர்ப்பாட்டம் நடத்த
அனுமதி வேண்டும் என கோரினர். அப்போது அரசு தரப்பு சார்பில் மதுரை தமுக்கம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க தயாராக இருக்கிறோம் என சொல்லப்பட்டது.மேலும் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்த மாட்டோம், பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும். ஆர்ப்பாட்டத்திற்கு ஆயிரம் பேர் வருவர் என வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் என்பது முக்கியம். இன்று மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் மதுரை அருகே பழங்காநத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தலாம். ஆர்ப்பாட்டத்தின் போது மத கலவரத்தை தூண்டும் வகையில் முழக்கங்கள் இருக்கக் கூடாது. ஒரே ஒரு மைக் மட்டும் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
