அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை ஏற்றிக்கொண்டு சி-17 ராணுவ விமானம் புறப்பட்டுள்ளது. இதில் 205 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் கிட்டத்தட்ட 7 லட்சத்து 25 ஆயிரம் இந்தியர்கள் உரிய ஆவணம் இன்றி வசிப்பதாக சொல்லப்படுகிறது. இதில் இன்று சி 17 ராணுவ விமானம் மூலம் 205 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.அமெரிக்க அதிபராக
டொனால்டு டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்றுவேன் என பிரசாரத்தின் போதே டிரம்ப் சூளுரைத்தார். அதேபோல, அமெரிக்கா நலன்களுக்கு மட்டுமே முக்கியம் அளிப்பேன் எனப் பேசி வந்த டிரம்ப், அதிபராக பொறுப்பேற்றதும், பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா அளித்து வந்த நிதி உதவியை நிறுத்தி வருகிறார்.அதேபோல கனடா,
மெக்சிகோ , சீனா ஆகிய நாடுகளுக்கும் வரி விதித்தார். அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் எனவும் மிரட்டி வருகிறார். டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் வர்த்தக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மெக்சிகோ மற்றும் கனடா பொருட்கள் மீதான வரியை தற்காலிகமாக
தற்போது நிறுத்தி வைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒருபக்கம் இருக்க, அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள புலம் பெயர் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையினையும் அந்நாடு தொடங்கியுள்ளது. அந்த வகையில், அமெரிக்காவில் சுமார் 7,25,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக வசிப்பதாக சொல்லப்படுகிறது. மெக்சிகோ, எல் சால்வடாருக்கு அடுத்தபடியாக இந்தியர்களே
அதிக எண்ணிக்கையில் சட்டவிரோதமாக வசிப்பதாக சொல்லப்படுகிறது. மெக்சிகோ எல்லையை ஒட்டி இருக்கும் மாநிலங்களில் அவசர நிலையை பிரகடனப்படுதிய டிரம்ப், வரும் நாட்களில் அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறிய மக்களுக்கு எதிரான தணிக்கை மற்றும் கைது நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறார். இத்தகைய சூழலில் தான், சட்டவிரோதமாக குடியேறியவர்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவின் ராணுவ விமானம் இந்தியா புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
