இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை கருப்பு நாளாக அனுஷ்டிப்பதற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் உறவினர்கள் தீர்மானித்துள்ளனர்.
இலங்கையின் 77வது சுதந்திர தினம் எதிர்வரும் 04ம் தேதி (செவ்வாய்கிழமை) அனுஷ்டிக்கப்படவுள்ளது.
நாட்டில் 30 வருட காலமாக இடம்பெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இன்று வரை நீதி கிடைக்காத பின்னணியில், தமக்கு சுதந்திர தினம் கிடையாது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கூறுகின்றனர்.
இலங்கையில் காணப்பட்ட இனப் பிரச்னையை அடுத்து இடம்பெற்ற உள்நாட்டுப் போர் 2009ம் ஆண்டு மே மாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.இந்த நிலையில், ஆயிரக்கணக்கான தமிழர்கள் அரசாங்கத்தினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக குற்றஞ்சுமத்தி, யுத்தம் முடிவடைந்த காலம் தொடக்கம் இன்று வரை அவர்களின் உறவினர்கள் பல்வேறு வகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
