காரின் பேரில் இருவரை கைது செய்ய ரூ.1 லட்சம் லஞ்சம் – கையும் களவுமாக சிக்கிய போலீஸ் எஸ்ஐ
மதுரை: வழக்கில் இருவரை கைது செய்ய, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.மதுரை ஜெய்ஹிந்தபுரம் காவல்நிலைத்தில் காவல் உதவி ஆய்வாளராக
பணியாற்றுபவர் சண்முகநாதன். கடந்த ஏழாம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கவிதா என்பவர், தன்னை சிலர் தாக்கியதாக ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்கீழ் மூன்று பெண்கள், ஒரு ஆண் என நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை எஸ்ஐ சண்முகநாதன் கவனித்த நிலையில் இருவர் கைது செய்யப்பட்டனர்.இதையடுத்து மேலும் இரு பெண்களை கைது
செய்வதற்கு 1 லட்சம் ரூபாய் கவிதாவிடம் லஞ்சம் கேட்டுள்ளார் சண்முகநாதன். இதனைத் தொடர்ந்து கவிதா லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் சண்முகநாதன் மீது புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் முதல்கட்டமாக முப்பதாயிரம் ரூபாய் ரசாயனம் தடவிய ருபாய் நோட்டுகளை, கவிதாவிடம் கொடுத்து சண்முகநாதனை
பிடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர் லஞ்ச ஒழிப்பு போலீசார்.தொடர்ந்து புதூர் பேருந்து நிலையம் அருகே சண்முகநாதன், கவிதாவிடம் இருந்து பணத்தை வாங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சண்முகநாதனை கையும் களவுமாக கைது செய்தனர். வழக்கில் இருவரை கைது செய்ய எஸ்ஐ லஞ்சம் கேட்டு சிக்கிய சம்பவம் மதுரை மாநகர காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
