செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி செய்யாறு அருகே ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரியில் இருந்த கேஸ் சிலிண்டர்கள், தண்ணீரில் மிதந்தன.செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் இருந்து 357 சமையல் எரிவாயு
சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று குடியாத்தம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அந்த லாரி இன்று அதிகாலை திருவண்ணாமலை செய்யாறு அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் தடுப்பை உடைத்துக் கொண்டு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் படுகாயம் அடைந்த நிலையில்,
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஏரியில் கவிழ்ந்த லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். லாரி ஏரியில் கவிழ்ந்த நிலையில், அதில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் ஏரியில் மிதந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்
ஏரியில் மிதந்து வந்த கேஸ் சிலிண்டர்களை மீட்கும் பணியில், பொதுமக்களுடன் இணைந்து ஈடுபட்டனர்.முழுமையாக நிரப்பப்பட்ட கேஸ் சிலிண்டர்கள் ஏரியில் மிதந்த நிலையில், அங்கு வந்த சிலிண்டர் நிறுவன அதிகாரிகள், பொதுமக்கள் உதவியுடன் பாதுகாப்பாக அவற்றை மீட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
