விழுப்புரம் பேருந்து நிலையத்தில் கட்டுக்கட்டாக ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும் படியாக நின்ற 4 பேரிடம் தலா ரூ.40 லட்சம் என்று மொத்தம் ரூ.1.60 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும் படியாக 4 பேர் நின்று கொண்டிருந்தனர். விழுப்புரம் தாலுகா போலீசார் அவர்கள் 4 பேரையும் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.இதனால்
போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது 4 பேர் வைத்திருந்த பையிலும் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரையும் புறக்காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் 4 பேரிடமும் தனித்தனியாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் சென்னையில் இருந்து பஸ் மூலம் திருச்சிக்கு ஹவாலா பணத்தை கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. அதோடு சென்னையில் இருந்து ரயில் மூலம் விழுப்புரம் வந்த அவர்கள் அங்கிருந்து பஸ்சில்
திருச்சிக்கு செல்ல முயன்றபோது சிக்கியது தெரியவந்தது. மேலும் போலீசாரிடம் சிக்கியவர்களின் பெயர்கள் முகமது ரியாஸ், சிராஜிதீன், அபுபக்கர், சித்திக் ராஜ் முகமது என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்த பணத்தை போலீசார் எண்ணிப்பார்த்தனர். அப்போது ஒவ்வொருவரிடமும் தலா ரூ.40 லட்சம் பணம் இருந்தது. மொத்தமாக ரூ.1.60 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. 4 பேரும் கைது
செய்யப்பட்டனர்.கைதான 4 பேரிடமும் இந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனால் அது ஹவாலா பணம் என்று போலீசார் கூறியுள்ளனர். இருப்பினும் அந்த பணம் யாருடையது? அதன் பின்னணி என்ன? என்பது போன்ற தகவல்கள் உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி 4 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
